இசைஞானி, ராகதேவன், இசைப் பிதா, மேஸ்ட்ரோ எனும்போது சற்று தள்ளிச் சென்றதுபோல் ஏற்படும் உணர்வை 'ராசய்யா' என்று உரிமையோடு அழைக்கும்போதுதான் இன்னும் இறுகப்பற்றிக் கொள்ளச் செய்துவிடுகிறது இளையராஜாவை. இந்தி திரைப்படப் பாடல்களும், சாஸ்திரிய சங்கீதமும்தான் இசை என்றெண்ணிக் கொண்டிருந்த எத்தனையோ சமன் செய்யப்பட முடியாத கணக்குவழக்குகளை தனது இசை பேராற்றலின் மூலம் சம்மட்டியடி கொடுத்து சமன் செய்தவர் இளையராஜா.
இந்த சமன்படுத்தல்தான் இளையராஜாவை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தது. தங்கள் அன்றாட வேலைகளின் அனிச்சையாக அவரது பாடல்கள் மாறியிருந்தன. மக்கள் இசையாக கொண்டாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு உழைக்கும் மக்களிடத்தில் நெருக்கம் அதிகம். மிக எளிமையான மெட்டுக்களைக் கொண்டு இட்டுக்கட்டிப் பாடப்படும் இவ்வகைப் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ராஜாவின் புகழைக் கொண்டு சேர்த்தவை.
ஊர் திருவிழாக்கள் தொடங்கி, சுக நிகழ்வுகள் உள்ளிட்ட கொண்டாட்டத்துக்கான பாடல்களாக அவை பாகுபாடின்றி எல்லா தரப்பிலும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்தப் பாடல்கள் மக்களிடம் மிக நெருக்கமாக சென்று சேர்ந்தமைக்கு இப்பாடல்களில் இளையராஜா பயன்படுத்திய இசைக் கருவிகள் முக்கியமானவை. தமிழ் பாரம்பரிய இசைக் கருவிகளில் தோல் இசைக் கருவிகள் கொண்டாட்டங்களை இரட்டிப்பாக்கும் தன்மைக் கொண்டவை.
தவில், பம்பை, உருமி, உடுக்கை, பறை என நீளும் அந்தப் பட்டியலில் வரும் தோல் இசைக் கருவிகள் வித்தியாசமான ஓசையை எழுப்பியதோடு, பாடல் கேட்ட கால்களை தானாக ஆட்டம் போடச் செய்தவை. வெறுமனே பாரம்பரிய இசைக் கருவியை மட்டும் பயன்படுத்தாமல், இந்த இசைக் கருவியோடு யாருமே எதிர்பார்த்திராத வேறு சில இசைக் கருவிகளைச் சேர்த்து, இளையராஜா மியூசிக்ல அடிபாட்டு போட்டுவிடு என கேட்பவர்களுக்கு விருந்து படைத்திருப்பார். இப்படி இளையராஜாவின் இசையில் தோல் இசைக் கருவிகளை தொடக்க இசையாக கொண்ட பாடல்களில் முக்கியமானவை:
» “படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்; வேற மாதிரி இருக்கும்” - ‘மாமன்னன்’ குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்
» “இதுதான் என் கடைசி படம்” - ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
அம்மன்கோயில் கிழக்காலே: சகலகலா வல்லவன் திரைப்படத்தில் வரும் டைட்டில் பாடல். பாடலின் தொடக்கமே கோரஸுடன் சேர்த்து டேப்பின் தாளத்துடன் உற்சாகத்தைக் கொண்டுவரும். டேப் என்பது பறை போன்ற இசைக் கருவிதான். பறை இசை கருவியில் பலரும் விரும்பிக் கேட்கும் ஒத்தடிக்கு இணையான தாளத்தில், இந்தப் பாடல் அமைந்திருக்கும். பல ஊர் திருவிழாக்களின் தொடக்கப் பாடலாக இந்தப் பாடலே நீண்ட நாட்கள் ஒலித்து வந்தது.
அம்மன் கோயில் கும்பம்: அரண்மணை கிளி படத்தில் வரும் இந்தப் பாடலும் ஊர் திருவிழா பாடல்தான். ஆனால், இளையராஜா தவில், பம்பை, உருமி என அனைத்தையும் பயன்படுத்தி பக்தியின் ஊடே தமிழ் இசைக் கருவிகளின் நாதத்தையும் சேர்த்துவிட்டிருப்பார். பாடல் முழுவதும் வரும் அக்கருவிகளின் இசைக் கோர்ப்பில் பலருக்கும் சாமி இறங்கி வந்து ஆடும்.
தவமிருந்து கெடச்சப்புள்ள: கோயில்காளை திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலும் சாமி பாடல்தான். தேவ தந்துமி எனப்படும் உருமி உறுமும் சப்தம் முழுப்பாடலில் வந்துகொண்டே இருக்கும். அந்த உருமியின் சத்தமும், உடன் சேரும் மற்ற பிற இசைக்கருவிகளும் பக்தி கடந்த ஒரு இனம்புரியாத உணர்வை ஏற்படுத்தி மனதை ஏதோ ஒன்று செய்யும். அந்த ஒன்றுதான் இளையராஜாவின் இசைப்பிரியர்களுக்கு இத்தனை நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப்பாடலின் இன்னொரு சிறப்பு கும்மிப்பாட்டு ஸ்டைலில் பாடலை இளையராஜா அமைத்திருப்பார்.
கும்பம்கர சேர்த்த தங்கையா: கும்பக்கரை தங்கய்யா படத்தில் வரும் இப்பாடல் வந்த புதிதில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. கால ஓட்டத்தில் இந்தப் பாடல்கள் எல்லாம் பரவலாக கேட்க முடிவதில்லை. முன்பெல்லாம் ஊர் திருவிழா, பால்குடம், பூச்சொரிதல் என்றால், இந்தப் பாடல்கள் எல்லாம் வரிசைக்கட்டி நிற்கும். தற்போது அத்தகைய சூழல் பெரும்பாலான இடங்களில் இல்லை என்றாலும், இவையெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத வகையைச் சேர்ந்தவை.
பல்லாக்கு குதிரையில: தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை சுற்றுவட்டாரத்தில் கோயில் திருவிழாக்களில் அடிக்கடி கேட்க முடிந்த பாடல் இது. பெரிய வீட்டுப் பண்ணக்காரன் திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடல் இது. பெரிய பெரிய ஸ்பீக்கர்களை அடுக்கி, இந்தப் பாடலின் துவக்க இசையைக் கேட்டு மகிழ்வதில் அப்படியொரு ஆனந்தம் பலருக்கு கிடைத்திருக்கும். அதிலும், பாடலின் பல்லவியில் சின்ன சின்னதாக வரும் புல்லாங்குழலின் இசையை கேட்பதற்கு அத்தனை அழகாக இருக்கும்.
மாங்குயிலே பூங்குயிலே: தமிழ் சமூகத்தின் கலை பண்பாட்டின் அடையாளமான கரகாட்டத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் கரகாட்டக்காரன். இந்தப்படத்தில், நாதஸ்வரம், தவில், பம்பை, உருமி, மேளம், சுருதி பெட்டி என ஒரு கரகாட்டக் குழுவில் பயன்படுத்தப்படும் அத்தனையையும் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பாடலில் வாசிக்கப்படும் நடைகளும், தீர்மானங்களும் உண்மையான கரகாட்ட இசைக் கலைஞர்களுக்கே சவாலாக அமைந்திருக்கும். அந்தமாதிரி தாளக்கட்டுக்களை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
பொதுவாக என் மனசு: முரட்டுக்காளையில் வரும் இந்தப் பாடலும் திருவிழா காலத்து கொண்டாட்டப் பாடல்தான். இந்தப் பாடலில் கொம்பையும், குலவை போடும் சப்தத்தையும் இளையராஜா பயன்படுத்தியிருக்கும் விதம் தனித்துவமாக இருக்கும். முன்னதாக, பாடலை பறையின் இசையிலிருந்து தொடங்கி, பாடல் கேட்பவர்கள் அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு ஆயத்தப்படுத்தி ஆட்டம் போட வைத்திருப்பார்.
ஜாதி இல்ல பேதமில்ல : காதல் பரிசு படத்தில் வரும் இந்தப் பாடலை எழுதுவதற்கு, இப்போதெல்லாம் சென்னை ரிதம்ஸ் என்ற பெயரில், சட்டி மேளத்தின் சத்தம் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதுவொரு கிளப் ஸாங். ட்ரெம்பட், டிரம்ஸ் சகிதமாக இந்தப் பாடல் தொடங்கும். ஹோட்டலுக்கு வெளியில் இருந்து கேட்கும் அந்த நாட்டுப்புற இசையை அப்படியே உள்வாங்கி, தபேலாவின் துணை கொண்டு ஷூ போட்ட கால்களையெல்லாம் குதியாட்டம் போடச் செய்திருப்பார் இளையராஜா.
வா ராசா வந்துபாரு: வடஇந்தியப் பகுதியில் டோலக்கு என்ற இசைக் கருவி மிகவும் பிரபலமானது. சாலையோர வித்தைக்காரர்கள் இந்த கருவியை ஒத்த கருவியைப் பயன்படுத்துவர். அந்த வகையில் அடுத்த வாரிசு திரைப்படத்தில் வரும் ஸ்ரீதேவியின் துவக்கப் பாடலாக இந்தப் பாடல் வரும். உள்ளூர் இசைக் கருவிகள், பிற மாநில இசைக் கருவிகள் என அனைத்தையும் சேர்த்து தாளத்தில் ஜுகல்பந்தி படைத்திருப்பார் இளையராஜா.
சாந்துபொட்டும் சந்தனபொட்டும்: சீரான இடைவெளியில் அவ்வப்போது நாட்டுப்புறப் பாடல்களை இசையமைத்து வந்த ராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவ்வகை இசையை மீண்டும் கொண்டு வந்திருந்தது படம் வீரத்தாலாட்டு. இந்தப் படத்தில் வரும் இந்தப் பாடலிலும், பல நாட்டுப்புற இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். படமும் பாடலும் வெளியாகியிருந்த சமயத்தில், எந்தப் பக்கம் திரும்பினாலும் உற்சாகத்தை அள்ளித்தரும் கொண்டாட்டத்தின் உச்சமாக இந்தப் பாடல் இருந்து வந்தது.
அறிமுகமான முதல் படத்தின் டைட்டில் கார்டு தொடங்கி, ஆயிரமாவது படமான தாரை தப்பட்டை வரை இளையராஜாவின் இசைப் பயணத்தில் தோல் இசைக் கருவிகள் உன்னதமான பங்களிப்பைச் செய்திருப்பவை. ஆனால், தலைமுறை இடைவெளி, கணினிமயமான வாழ்வியல் சூழலில் தோல் இசைக் கருவிகள் அருகி வருகின்றன. தோலுக்கு மாற்றாக ஃபைபர் கொண்டே இப்போதெல்லாம் இசைக் கருவிகள் பூட்டப்படுகின்றன.
இழுத்துக் கட்டப்பட்ட தோலில் இருந்து வரும் நாதத்துக்கு முன்னால், எவ்வித உணர்வையும் பிரதிபலிக்க முடியாத ஃபைபரின் சத்தமெல்லாம் ஒன்றுமே இல்லை. இருப்பினும், வேலைப்பளு, தோல் கிடைப்பதில் உள்ள சிரமம், கருவிகளைச் செய்து கொடுக்கும் சரியான நபர்கள் போதாமை உள்ளிட்ட காரணங்களால் மாற்று இசைக் கருவிகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. என்ன நடந்தாலும், ராஜாவின் இசையில் வந்த தோலின் இசைக் கருவிகளின் பயன்பாட்டை யாராலும் நெருங்கிடவே முடியாது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago