“பூமியில் பிறந்த ஒரே நட்சத்திரம்” - மம்மூட்டியை புகழ்ந்த ‘2018’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

‘‘இந்த பூமியில் பிறந்த ஒரே நட்சத்திரம்” என ‘2018’ பட இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப், மம்முட்டியை நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார். ‘2018’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மம்முட்டி ஜூட் ஆந்தணி ஜோசப்பின் தலைமுடி குறித்து கிண்டலடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.150 கோடியை வசூலித்து மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் மம்மூட்டியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “வானத்தில் அல்ல, பூமியில் பிறந்த ஒரே நட்சத்திரம். நல்ல மனிதர். இந்த அன்புக்கும்..நெருக்கத்துக்கும், அற்புதமான வார்த்தைகளுக்கும் நன்றி மம்மூக்கா” என நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.

முன்னதாக ‘2018’ படத்தின் டீசர் விழாவின்போது பேசிய நடிகர் மம்மூட்டி, ‘இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் தலையில் முடி இல்லாவிட்டாலும், அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டீசரைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது” என தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மம்மூட்டி தன்னுடைய இந்தப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அதில் அவர், “அன்பர்களே, '2018' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜூட் ஆந்தணியை பாராட்டி உற்சாகத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் சிலரை காயமடையச் செய்ததற்கு வருந்துகிறேன். அத்துடன் இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துகொள்வதில் கவனமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE