ஜிமிக்கி கம்மல் பாடல் திருடப்பட்டதா? - இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் விளக்கம்

'ஜிமிக்கி கம்மல்' பாடல் குஜராத்தி பாடலிலிருந்து திருடப்பட்டது என்று வெளியான செய்திக்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் சமீபத்தில் மிகவும் வரவேற்பைப் பெற்ற பாடல் 'ஜிமிக்கி கம்மல்'. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'Velipadinte Pusthakam' படத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. இதற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு தரப்பினரும் தங்களுடைய குழுவினரோடு இப்பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்கள்.

இந்நிலையில், இப்பாடல் குஜராத்தில் பாடலிருந்து திருடப்பட்டது என்று செய்திகள் வெளியானது. இதனால் இணையத்தில் சர்ச்சை உருவானது. இது குறித்து இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அன்பு நண்பர்களே,

ஜிம்மிக்கி கம்மல் பாடல் ஒரு குஜராத்தி பாடலிலிருந்து திருடப்பட்டுள்ளது என சில விஷமிகள் தவறான தகவலைப் பரப்பி வருவதை கவனித்துள்ளோம். வழக்கமாக இத்தகைய விஷயங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஏனென்றால் எது உண்மை, எது பொய் என்பது ரசிகர்களுக்குத் தெரியும். அதனால் மக்களே முடிவெடுத்துக்கொள்ளட்டும் என விட்டுவிடுவேன். ஆனால் இப்போது மலையாளிகள் சிலரே இந்தப் பாடல் திருடப்பட்டது என வாட்ஸ்அப்பில் பகிர்ந்து வருவதை பார்க்கிறேன்.

ஜிம்மிக்கி கம்மல் மலையாளிகளுக்கான பெருமைக்குரிய பாடல். சர்வதேசப் பிரபலம் ஜிம்மி கெம்மல், பிபிசி தொலைக்காட்சி, சர்வதேச ரசிகர்களின் நடனம், இந்தியாவில் ஒவ்வொரு பண்பலையிலும் ஒலிபரப்பு என இந்தப் பாடல் பல உயரங்களைத் தொட்டுள்ளது. இப்படி ஒரு வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்த கால நேரத்தில் அந்தப் பாடல் சாதித்திருப்பது எங்களுக்கு பெருமையே. ஒரு மலையாளப் பாடல் பிபிசியால் கவனிக்கப்பட்டிருப்பதில் பெருமை. உலகம் முழுவதிலிருமிருந்து பாடலுக்கான பாராட்டு குவிந்துள்ளது.

இந்த விஷமிகள் பரப்பி வரும் வீடியோ, ரெட் எஃப்.எம்.குஜராத்தின் முன்னெடுப்பு. அந்த வீடியோவின் கீழ் ரெட் எஃப்.எம் லோகோ இருப்பதை நீங்கள் பார்க்கலாம். பாடலில், ‘கொட்ரா’, ’அங்கனே’என நான் சொல்லும் எனது குரலும் இந்த வீடியோவில் இருக்கிறது. அதாவது நான் திருடியதாகச் சொல்லப்படும் பாட்டில் ஏற்கனவே என் குரல் இருக்கிறது. விஷயம் என்னவென்றால். இந்தியா முழுவதுமிருக்கும் ரெட் எஃப்.எம் ஆர்ஜேக்கள் தங்களது சொந்த ஜிம்மிக்கி கம்மல் பாடல் வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது குறித்து எங்களுக்கு பெருமை. அதில் ஒரு வீடியோவே இது.  ஜிம்மிக்கி கம்மல் நமது பாடல். நமது சொந்தப் பாடல் மக்களே.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE