விரூபாக்‌ஷா: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

நகரத்தில் படித்து வளர்ந்த சூர்யா (சாய் தரம் தேஜ்), அம்மாவின் அழைப்பை ஏற்று ருத்ரவனம் என்ற அவர் கிராமத்துக்குச் செல்கிறார். அக்கிராமத்தின் அழகும் அங்குவாழும் மனிதர்களும் அவரைக் கவர்கின்றனர். அவ்வூரின் பெரிய மனிதர் ஹரிச்சந்திராவின் (ராஜீவ் கனகலா) மகள் நந்தினியை (சம்யுக்தா) சூர்யா காதலிக்கிறார். நந்தினியும் சூர்யாவைக் காதலித்தாலும் அதை வெளிப்படுத்தாமல் ஒளித்து வைக்கிறாள். திடீரென்று கிராமவாசிகளில் சிலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணிக்கிறார்கள். அதன்பின்னாலுள்ள மர்மத்தை அவிழ்க்க முயலும் சூர்யா, அதைக் கண்டுபிடித்தாரா? அவர் காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.

தொண்ணூறுகளின் ஆந்திர கிராமம் ஒன்றில் நடக்கும் இக்கதை, நாயகன் ஊருக்குள் நுழையும்போதே திகிலும் சுவாரஸ்யமும் நிறைந்த குறியீட்டுக் காட்சியுடன் படம் தொடங்குகிறது. நாயகன் - நாயகி இடையிலான காதல் காட்சிகளில் புதிதாக ஏதும் இல்லாவிட்டாலும் ரசிக்கும் விதமாக வசனங்களையும் பாடல் காட்சிகளையும் அமைத்திருப்பதால் விறுவிறுவென நகர்கின்றன. இரண்டாம் பாதிப் படத்திலும் நேரத்தை வீணடிக்காமல் கதையின் முடிச்சுகளை அவிழ்ப்பதை நோக்கி தடையில்லாமல் பயணிக்கிறது ‘புஷ்பா’ சுகுமாரின் திரைக்கதை. முதன்மைக் கதாபாத்திரங்கள், துணைக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கதைக்காக மட்டுமே முன்னிறுத்தும் கச்சிதமும் முழுமையும் கூடிய கதாபாத்திர எழுத்து, இப்படத் திரைக்கதையின் இன்னொரு சிறப்பு.

தயாரிப்பு வடிவமைப்பும் அதை செயல்படுத்திய கலை இயக்கக் குழுவின் உழைப்பும் படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு. கலை இயக்கம் என்று வெளிப்படையாக சில இடங்களில் தெரிவது பலகீனம்தான் என்றாலும் அதையும் மீறி ருத்ரவனத்தின் உலகிற்குள் நம்மைப் பிரவேசிக்க வைத்து, தடையற்ற ‘ஹாரர் மிஸ்ட்ரி’ அனுபவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அதற்கு ஹம்தாத் ஷைனுதீன் ஒளிப்பதிவு, அஜனீஷ் லோக்நாத்தின் இசை, ஒலி வடிவமைப்பாளர், தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களை எழுதிய என்.பிரபாகர் ஆகியோரின் பங்களிப்பு பேரளவில் துணை நின்றிருக்கிறது.

நாயகனாக நடித்துள்ள சாய் தரம்தேஜ், கதையில் தனக்குத் தரப்பட்டிருக்கும் வெளியைத் தாண்டாமல் நடித்திருக்கிறார். நாயகனை விட கதையில் அதிக முக்கியத்துவம் கொண்டிருக்கும் நாயகி நந்தினியின் கதாபாத்திரத்துக்கு சம்யுக்தா சரியான தேர்வு என படம் முழுவதிலும் உணர்த்திவிடுகிறார். கிராமத்துப் பெண், அவர் பின்னாலிருக்கும் ரகசியம் என அழகும் பூடகமும் நிறைந்த நடிப்பை மிகையில்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மூடநம்பிக்கை மீதான பற்று, மாய மந்திரங்கள், மாந்திரீக தந்திரங்கள் ஆகியன, தலைமுறைகள் தோறும்கடத்தப்படுவதுபோல் சித்தரித்திருப்பது படத்தின் பிற்போக்கான அம்சம்.இதைக் கடந்து, பொது நன்மை என வரும்போது, அதை விரும்புகிறவர் தனிப்பட்ட இழப்புகளைத் தவிர்க்கவே முடியாது என உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ள இப்படம், கண்களை விலகவிடாத திரை அனுபவத்தைத் தருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE