‘தி கேரளா ஸ்டோரி’க்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உச்ச நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சன்ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில், வரும் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. எந்த ஆய்வும் செய்யாமல், எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லாமல், உண்மைச் சம்பவம் எனக்கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வகையில் இப்படத்தின் டீசரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்களைக் கொண்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்தை வெளியிட அனுமதித்தால், இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், பொது ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த திரைப்படத்தை வெளியிட முழுமையான தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," டீசரில் உண்மை கதை என்றும், பேட்டிகளில் கற்பனை கதை என்றும் கூறுகின்றனர். இந்த படத்துக்கு எதிராக அளித்த புகாரின் மீது உத்தரவு பிறப்பிக்காமல் தணிக்கைச் சான்று வழங்க முடியாது" என்று வாதிடப்பட்டது.

அப்போது பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், "உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கற்பனைக் கதைதான் இந்தப் படம். ஏற்கெனவே தணிக்கைச் சான்று வழங்கப்பட்ட நிலையில் படத்துக்கு தடை விதிக்க கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. தணிக்கைச் சான்றை எதிர்த்துதான் வழக்கு தொடர முடியுமே தவிர, படத்துக்கு தடை கோர முடியாது. படத்தில் 14 காட்சிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை கேரளாவில் வெளியிடும்போது தமிழகத்தில் ஏன் தடை செய்ய வேண்டும்?” என வாதிடப்பட்டது.

தமிழக அரசின் நிலைப்பாடு: அப்போது தமிழக அரசுத் தரப்பில், "ஏற்கெனவே இந்தப் பட விவகாரம் தொடர்பாக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த திரைப்படத்துக்கு தமிழக அரசு ஆதரவோ, எதிர்ப்போ இல்லை" என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி" செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்