‘‘ரஜினிக்கு தெலுங்கு மாநில அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை” - அமைச்சர் ரோஜா கிண்டல்

By செய்திப்பிரிவு

“ரஜினிகாந்துக்கு தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. என்டிஆர் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில மறைந்த முதல்வர் என்டி ராமராவின் 100-வது பிறந்த நாள் நிகழ்ச்சி விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு பேசிய அவர், “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வை காரணமாக ஹைதராபாத் நகரம் நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலளித்துள்ள ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, “ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. ஒரு நடிகராக ரஜினியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அவருக்கு தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. விஷன் 2020, 2047 என்று தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கும் தலைவர் சந்திரபாபு நாயுடு என ரஜினி குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபுவின் விஷன் 2020 காரணமாக தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் கிடைத்தன. இப்படியிருக்கும்போது 2047-ல் அவர் எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது” என்று ரோஜா கிண்டலாக பேசியுள்ளார்.

மேலும், “நேற்றைய தன்னுடைய உரையில் விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த். என்டி ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும். தன்னுடைய இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்டி ராமராவ், என்னுடைய மருமகன் ஒரு திருடன். அவனை யாரும் நம்பாதீர்கள் என்று கூறினார். ரஜினிகாந்துக்கு இது தெரியவில்லை என்றால் என்டி ராமராவ் பேச்சு அடங்கிய சிடியை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அதை போட்டு என்டி ராமராவ் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE