நான் ரஜினி - அஜித் ரசிகன்; விஜய் சிறப்பாக நடனமாடக் கூடியவர்: ஜூனியர் என்.டி.ஆர்

By ஸ்கிரீனன்

நான் ரஜினி மற்றும் அஜித் இருவரின் ரசிகன். விஜய் சிறப்பாக நடனமாடக் கூடியவர் என்று ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.

பாபி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராஷி கண்ணா, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஜெய் லவ குசா'. மூன்று கதாபாத்திரங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருக்கும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மட்டுமன்றி வசூலையும் குவித்து வருகிறது.

'ஜெய் லவ குசா' விளம்பரப்படுத்தும் விதமாக ஜூனியர் என்.டி.ஆர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

துறையில் நான் நுழைந்தபோது வெற்றி எனக்கு எளிதாக இருந்தது. பிறகு நான் தோல்விகளை சந்தித்தேன். அது கடினமான காலகட்டம். ஆனால் 'டெம்பர்' படத்துக்குப் பிறகு சூழல் மாறியதில் மகிழ்ச்சியே. ஆரம்பத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது, வெளியிலிருந்து அழுத்தங்களை சமாளிப்பது என நிறைய கவலைகள் இருந்தன. ஆனால் இப்போது என் மன நிறைவுதான் முக்கியம் என்பதை உணர்ந்து விட்டேன்.

வாழ்க்கையின் போக்கை யூகிக்க முடியாது. ’ஜெய் லவ குசா’, த்ரிவிக்ரமுடன் எனது அடுத்த படமும் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் நாம் விரும்புவதை செய்வதுதான் முக்கியம். 'ஜெய் லவ குசா'வில் என்னை ஈர்த்தது அதன் உணர்வுகளும், டிராமாவும்தான். வேறு மூன்று நடிகர்களையும் அதில் நடிக்க வைப்பது போலத்தான் மூன்று பிரதான கதாபாத்திரங்களும் எழுதப்பட்டிருக்கும்.

நான் தெலுங்கு சினிமாவில் நிலையான இடத்தைப் பெற வேண்டும். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் தனுஷ் இந்தியில் செய்ததைப் போல தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிக்க எனக்கு விருப்பமே. தமிழகத்தில் மக்கள் ஒரு படம் பார்க்கும் விதமும், ஆந்திரா/ தெலங்கானாவில் பார்க்கும் விதமும் முற்றிலும் வேறு.

'காக்க காக்க' வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் நான் அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் இளையவனாக இருப்பதாக நினைத்ததால் செய்யவில்லை. ஆனால் இப்போது சூழல் அப்படியில்லை. எனது நண்பர்கள் 'விக்ரம் வேதா' படத்தை ரீமேக் செய்யுமாறு கேட்கிறார்கள். தமிழில் அந்தப் படம் வெற்றியடைய சரியான நடிகர்கள் அமைந்ததே காரணம். தெலுங்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பதே என் கேள்வி?

நான் முன்னால் ரஜினிகாந்தின் பெரிய ரசிகன். இப்போது அஜித் ரசிகன். அவர்கள் திரையில் தோன்றினால் கண் சிமிட்டக் கூட மறந்துவிடுவேன். தமிழில் விஜய்யின் நடனம் தான் எனக்குப் பிடிக்கும். அவரது வசந்த முல்லை பாட்டை எனது ’கந்த்ரி’ படத்தில் அப்படியே வைத்திருந்தேன்.

எனது தாத்தா மாநிலத்தில் எல்லோருக்கும் சொந்தம். யார் வேண்டுமானாலும் அவரது வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம். ஆனால் அவர் வேடத்தில் நடிக்க எனக்கு தைரியம் இல்லை.

இன்று ரசிகர்கள் புராண கதாபாத்திரங்களைப் பார்க்க தயாராக இல்லை. ’பாகுபலி’ முழுக்க கற்பனை என்பதால் வெற்றியடைந்தது. ஆனால் புராண கதாபாத்திரங்களை மீண்டும் திரையில் கொண்டு வருவது எனபது வேறு. அதோடு, ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்ப ஏதோ ஒரு அரசியல் கட்சி தயாராக இருக்கும். அதனால் அத்தகைய புராண கதாபாத்திரங்களை 'ஜெய் லவ குசா'வில் இருப்பது போல நிகழ்காலத்தோடு கலந்து தரலாம்.

இவ்வாறு ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE