ஏ.என்.ஆர் விருதை என் தோளின் மீது பாரம் போல உணர்கிறேன்: இயக்குநர் ராஜமவுலி

ஏ.என்.ஆர் விருதை என் தோளின் மீது மிகப்பெரிய பாரம் போல உணர்கிறேன் என்று இயக்குநர் ராஜமவுலி தெரிவித்தார்.

2017-ம் ஆண்டுக்கான அக்கினேனி நாகேஸ்வர ராவ் விருதுக்கு இயக்குநர் ராஜமவுலி தேர்வு செய்யப்பட்டார். இவ்விருது வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு ராஜமவுலிக்கு விருதினை வழங்கினார்.

இவ்விழாவில் இயக்குநர் ராஜமவுலி பேசியதாவது:

அக்கினேனி நாகேஸ்வரராவ் போன்ற ஒரு மகானின் பெயரைத் தாங்கிய விருதினை இன்று தந்திருக்கிறார்கள். ஒரு உயர்ந்த மனிதரின் பெயரிலிருக்கும் விருதுக்கு நான் தகுதியானவனா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். தகுதியானவன் இல்லை என்பது எனக்குத் தெரியும். தன்னடக்கத்தால் இதை சொல்கிறேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். தகுதியில்லை என்பது எனக்கு தெரியும்.

(மேடையிலிருக்கும்) நாகார்ஜுனா அவர்களே, இப்படியான விருதினைப் ஒருவர் பெறும்போது, அது அவருக்கு சக்தி தருவாதாக, பறக்க இறக்கைகள் தருவதாக உணர வேண்டும். ஆனால் என்னால் அப்படி உணர முடியவில்லை. இந்த விருதினை என் தோளின் மீது மிகப்பெரிய பாரம் போல உணர்கிறேன்.

ஒருவேளை, இன்னும் கஷ்டப்படவேண்டும், இன்னும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும், இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே இந்த விருது தரப்பட்டுள்ளதோ என நினைக்கிறேன். நான் கண்டிப்பாக என் முழு ஆற்றலைத் தருகிறேன். இந்த விருதுக்கு தகுதியானவனாக என்னை ஆக்கிக்கொள்ள முயற்சிக்கிறேன்

இவ்வாறு ராஜமவுலி பேசினார்.

2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகளை தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே.பாலசந்தர், ஹேமமாலினி, ஷ்யாம் பெனகல் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இதுவரை பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE