இசையமைப்பாளர் கீரவாணிக்குக் கிடைத்திருப்பது இந்தியாவுக்கான ‘முதல்’ ஆஸ்கர்!

By ம.சுசித்ரா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்தபடியாக ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணி என்றழைக்கப்படும் எம்.எம்.கீரவாணி பெற்றிருப்பதாகப் பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இசையமைப்பாளர் கீரவாணிக்குக் கிடைத்திருப்பதுதான் இந்தியாவுக்கான முதல் ஆஸ்கர். அதாவது ஏ.ஆர்.ரஹ்மான், ரசுல்பூக்குட்டி முதலான இந்தியர்கள் ஏற்கெனவே ஆஸ்கர் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட படத்தில் பணிபுரிந்தபோது அவ்விருது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஆஸ்கர் புகழ் இந்தியர்களை முதலில் பார்வையிட வேண்டும்.

முதன்முறையாக இந்தியர் ஒருவருக்கு ஆஸ்கர் விருது 1983-ல் கிட்டியது. ஆடை வடிவமைப்பாளர் பானு அதியா என்ற பெண்ணுக்குத்தான் அந்த விருது வழங்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் கோல்ட்க்ரெஸ்ட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் இணைந்து 1982-ல் தயாரித்த, ‘காந்தி’ திரைப்படத்துக்காகக் கிடைத்த விருது அது. இங்கிலாந்து நாட்டுக்காரர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய படம் அது என்பதும் அனைவரும் அறிந்ததே. காந்தி படத்துக்கு இசையமைத்த இந்திய சித்தார் இசைக்கலைஞர் ரவிஷங்கர் ஆஸ்கரில் ‘சிறந்த அசல் இசை’-க்கு அன்றே பரிந்துரை செய்யப்பட்டார். ஆனால் விருது கை நழுவிப் போனது.

அதன்பிறகு ‘சலாம் பாம்பே’, ‘லகான்’ படங்களெல்லாம் ‘சிறந்த அயல் மொழி திரைப்பட’ பிரிவுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன. விருது கிடைக்கவில்லை. அதிலும் எல்.சுப்பிரமணியம் ‘சலாம் பாம்பே’-க்கு, ஏ.ஆர்.ரஹ்மான் ‘லகான்’ படத்துக்கு அபாரமாக இசையமைத்திருந்தாலும் அவை இசை பிரிவில் பரிந்துரை பட்டியலில்கூட சேர்க்கப்படவில்லை.

இதற்கிடையில், வாழ்நாள் சாதனையாளர் விருது கவுரவ பட்டமாக 1992-ல் ’பதேர் பாஞ்சலி’, ‘அபுர்சன்சார்’, ‘அபரஜிதோ’, ‘சாருலதா’ உள்ளிட்ட இந்தியத் திரை காவியங்களைப் படைத்த இயக்குநர் சத்தியஜித் ரேவுக்கு அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது வீடு தேடி வந்தது. அதுவும் குறிப்பிட்ட படத்துக்காக அவருக்கு வழங்கப்பட்டதல்ல அந்த விருது.

பிறகு வந்தது இசைப்புயலை ஆஸ்கர் நாயகனாக ஆக்கிய ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ திரைப்படம். ’ஜெய் ஹோ’ பாடலுக்கு சிறந்த அசல் பாடல் ஆஸ்கர் விருதும், ஒட்டுமொத்தமாகப் படத்துக்கு சிறந்த அசல் இசை ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டன. பாடலாசிரியர் குல்சாருக்கும் ’ஜெ ஹோ’ பாடலுக்கான விருது கிட்டியது. சிறந்த இசை கலவை விருது ரசுல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் இந்தியர்கள், படத்தின் கதை களம் இந்தியாவானாலும் படம் இந்திய படம் அல்ல என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் சினிமா தயாரிப்பு நிறுவனமான செலடார் பில்ம்ஸ் மற்றும் பில்ம் 4 ப்ரொடக்‌ஷன்ஸ் மூலமாக வெளிவந்த படம் இது. படத்தின் இயக்குநர் டானி பாயலும் பிரிட்டிஷார்தான்.

இதனை அடுத்து அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் 2000 பிக்சர்ஸ் தயாரித்து 2012-ல் வெளிவந்த, ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் சிறந்த அசல் பாடல் பிரிவில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தமிழில் எழுதி இசையமைத்த தாலாட்டு பாடல் ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பிடித்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

இப்படி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியர்களில் ஒரு சிலருக்கு ஆஸ்கர் விருது அத்திபூத்தாற்போல் கிடைத்திருந்தாலும் நேரடியாக ஒரு இந்திய சினிமாவுக்குக் கூட ஆஸ்கர் வழங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்நிலையில், கடந்த 30 ஆண்டு காலமாக தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துவரும் தயாரிப்பாளர் தானய்யாவின் டிவிவி என்டர்டெய்ன்மெட் மூலம் தயாரிக்கப்பட்டு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ஆர்.ஆர்.ஆர்.-ல் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கரை தற்போது தட்டிச் சென்றிருப்பது இந்திய வரலாற்றில் புதிய சகாப்தம். இந்தியாவையும் இந்தியர்களையும் மையமாக வைத்து அயல்நாட்டவர் தயாரித்த படம் அல்ல இது. அதுமட்டுமின்றி ‘சிறந்த அயல் மொழி திரைப்பட’ பிரிவிலும் விருது வழங்கப்படவில்லை. சிறந்த அசல் பாடலுக்கான விருது, ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு கிடைத்திருக்கிறது. எனவே, இது ஆஸ்கர் வென்ற முதல் இந்தியத் திரைப்பட தயாரிப்பு என்ற பெருமைக்குரிய தருணமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்