இணையத்துக்கும் சென்சாரா? - கர்நாடக திரைத்துறை போர்க்கொடி!

தணிக்கை செய்யப்படாத திரைப்படத்தின் எந்த பகுதியும் தொலைக்காட்சியிலோ, சமூக வலைதளங்களிலோ பயன்படுத்தக் கூடாது என தணிக்கைத் துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக திரைத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, தணிக்கைக்கு வரும் தயாரிப்பாளர்களிடம் தணிக்கைத் துறை புது உத்திரவாதம் ஒன்றை பெற்று வருகிறது. இதன்படி, தணிக்கை செய்யப்படாத திரைப்படத்தின் எந்த பகுதியும் தொலைக்காட்சியிலோ, சமூக வலைதளங்களிலோ பயன்படுத்தப்பட மாட்டாது என தயாரிப்பாளர்கள் உறுதி கூற வேண்டும்.

இதை சட்டவிரோதம் என கூறியுள்ள இயக்குநர்கள், கர்நாடக திரைப்பட சங்கத்துக்கு குறிப்பாணை ஒன்றையும் அனுப்பியுள்ளனர். மேலும், இணையத்தில் பதிவேற்றப்படும் திரைப்படங்களின் விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மீது தணிக்கைத் துறை கட்டுப்பாடுகள் விதிக்குமேயானால் அது முன்னமே தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் சூரப்பா பாபு பேசுகையில், பல தயாரிப்பாளர்கள் இது குறித்து புகார் கூற முன் வரவில்லை என்றும், தங்கள் திரைப்படத் தணிக்கையில் சிக்கல் வரலாம் என அவர்கள் அச்சப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இயக்குநர்களின் குறிப்பாணையைப் பெற்ற திரைப்பட சங்க தலைவர் உமேஷ் பனாகர், இது பற்றிய தெளிவு வேண்டி மாநில அதிகாரிக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார். தணிக்கைத் துறை மாநில அதிகாரி டி.என்.ஸ்ரீனிவாசப்பாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.

ஆனால், மூத்த தணிக்கைத் துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "தணிக்கை செய்யப்படாத காட்சிகள் சமூக வலைதளங்களிலிருந்து தொலைக்காட்சி சேனல்களுக்கு செல்கின்றன. தணிக்கைத் துறை ஆட்சேபணை தெரிவித்தபோது அவை சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டன" என்றார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா, சமூக வலைதளத்தில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு தணிக்கை என்பது முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர் பேசுகையில், சமூக வலைதளத்தில் பதிவேற்றப்படும் விளம்பரங்களுக்கு தணிக்கை செய்ய எந்த சட்டமும் இல்லை என்றார். மேலும், இணைய விளம்பரங்கள் சிக்கனமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE