திரைப்படங்களுக்கான பின்னணி இசைக்கோர்ப்பு என்பது ஒரு தனிக் கலை. சினிமாவுக்கு முந்தைய நாடக காலங்களில், பார்வையாளர்களை விழித்திருக்கச் செய்யவும், அவர்களது கவனத்தை ஈர்க்கவும் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை இடைவெளியின்றி இசையமைக்கப்பட்டிருக்கும். இடையிடையே பாடல்களும் பாடப்படும். இந்தப் பின்னணியில்தான் திரைப்படங்களுக்கான இசைக்கோர்ப்புப் பணிகளும் தொடங்கின. பழைய கருப்பு வெள்ளைக் காலத்து திரைப்படங்களில் டைட்டில் கார்டில் தொடங்கும் இசை சுபம் என முடியும் இறுதிக்காட்சி வரை இசைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
காலங்காலமாக பின்பற்றிவந்த இந்த நடைமுறையை இசையமைப்பாளர்களும் மாற்றவே இல்லை. கருப்பு வெள்ளை காலத்திலிருந்து கலர் திரைப்படங்கள் வந்தபோதும் இது தொடரவே செய்தது. ஒரு படத்தின் எல்லாக் காட்சிகளிலுமே ஏதாவது இசைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். பிற்காலத்தில் இந்த நிலை மாறிவிட்டது. ஒரு சாதாரண மனிதனது உண்மையான வாழ்க்கையில் ரீ ரெக்கார்டிங்கோ, பாடல்களோ இருப்பது இல்லை. தற்கால சினிமாக்கள் இதை உணர்ந்திருக்கின்றன.
அந்த வகையில் இந்தியா முழுவதும் திரைப்பட ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தின் பின்னணி இசையும் பேசு பொருளாகியுள்ளது. படத்தில் பின்னணி இசையென்று எதையும் திணிக்காமல் படத்தின் கதைக்களத்தில் கேட்கின்ற பாடல்களும், சத்தங்களும் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியின் கேசட் கடைகள், டூர் வேன், நெடுஞ்சாலை மோட்டல், கிராமத்து வீடுகளின் தொலைக்காட்சிப் பெட்டிகள், கோயில் என எங்கெல்லாம் பாடல்கள் தவிர்க்கப்படாதோ அவையெல்லாம் நுட்பமாக கையாளப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் வரும் காட்சிகளுக்காக இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி தேர்ந்தெடுத்துள்ள பாடல்கள் வெறுமனே அந்த இடத்தை நிரப்புவதற்காக மட்டும் இல்லாமல் படம் பார்ப்பவர்களைச் சிந்திக்க செய்திருக்கின்றன.
» புதிய லுக்கில் நடிகர் மாதவன் கூல் செல்ஃபி!
» நடிகர் மனோஜ் மன்சு 2வது திருமணம் - அரசியல்வாதி மகளை மணக்கிறார்
படத்தின் டைட்டில் கார்டில், கடந்த 1967-ம் ஆண்டு கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த திருவருட்செல்வர் திரைப்படத்தில் இடம்பெற்ற, "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே" என்ற பாடலை பயன்படுத்தியிருப்பார் இயக்குநர். இது வேளாங்கண்ணி சென்று திரும்பும் ஜேம்ஸ் உள்ளிட்டவர்களை மட்டுமின்றி படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கேட்பதுபோல் அமைந்திருக்கும்.
இதனைத் தொடர்ந்து மோட்டலில் சாப்பிடும் காட்சிகளின் இடையே 1978-ல் இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படத்தில் இடம்பெற்ற "செந்தாழம் பூவில்" பாடலின் இடையிசையும், 1980-ல் இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற "மடைதிறந்து தாவும்" பாடலும் இசைக்கப்பட்டிருக்கும். நல்ல வெயில் நேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்பது சவாலானது. அதுபோன்ற ஒரு கடுப்பான நேரத்தில் நிறுத்தப்படும் இடங்களில் பயணக் களைப்புக்குத் தேவைப்படும் ஆறுதலை அளிப்பவை பாடல்கள். இந்த அனுபவத்தை பகிரும் வகையில் இளையராஜா இசையில் வந்த அந்த இரு பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிலும் 'செந்தாழம் பூவில்' பாடலின் ஹம்மிங்கும், வயலின் இசையும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். மக்களின் ஆத்மாவில் புதைந்துக் கிடக்கும் அந்தப்பாடலை தோண்டியெடுக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசெரிக்கு அந்த சின்ன ஹம்மிங்கே போதுமானதாக இருந்திருக்கிறது.
மோட்டலில் மதிய உணவு முடிந்து, மீண்டும் பயணம் தொடங்குகிறது. 1962-ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த, ‘படித்தால் மட்டும் போதுமா’ படத்தில் இடம்பெற்ற "பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை, என்னென்று நான் சொல்லலாகுமா?" பாடல் வரும். அதனைத் தொடர்ந்து 1966-ல் ஆர்.பார்த்தசாரதி இசையில் வெளிவந்த, ‘அவன் பித்தனா?’ படத்தில் இடம்பெற்ற, "இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்" பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடலின் வரிகள், "இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான், அவன் இருந்தால் உலகத்திலே, எங்கே வாழ்கிறான்? நான் ஆத்திகனானேன், அவன் அகப்படவில்லை, நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை" என்று எழுதப்பட்டிருக்கும்.
இதனைத் தொடர்ந்து 1965-ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த, பழநி படத்தில் இடம்பெற்ற, "ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும், ஏரோடும் என்றும் நம்ம தேரோடும், போராடும் வேலை இல்லை, யாரோடும் பேதம் இல்லை, ஊரோடும் சேர்ந்துண்ணலாம்" என்ற பாடலை இயக்குநர் பயன்படுத்தியிருப்பார். சுட்டெரிக்கும் வெயில் தகிக்கும் தேசிய நெடுஞ்சாலை பயணங்களில், பயணிகளுக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் மதிய உணவுக்குப் பிறகான உறக்கத்தைக் கட்டுப்படுத்தி தங்களைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சீர்காழி கோவிந்தராஜனின் குரல்களின் அத்தியாவசியத்தைப் புரிந்து இப்பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ஓரிடத்தில் வேனை நிறுத்தச் சொன்ன இடத்தில் மம்மூட்டி அந்த ஊருக்குள் நுழைவதிலிருந்து, 1954-ல் வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம் அந்த பாடலோடு தொடங்கிவிடும். வெளிநாட்டில் இருந்து திரும்பும் மகனாக எம்.ஆர்.ராதா அதகளப்படுத்தியிருக்கும் அந்தத் திரைப்படம் இதுநாள் வரையில் தமிழ் சினிமாவின் மைல் கல். அந்த திரைப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்துக்கு மிகச் சிறந்த பின்னணியாக அமைந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த எம்.ஆர்.ராதாவின் நடத்தைகள் அவரது தாய்க்கும், உறவினருக்கும் அதிர்ச்சியளிக்கும். அதேபோல, இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர் மீண்டு வந்ததுபோல மம்மூட்டி நடந்துகொள்வது, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கும், ஊர்காரர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
தொடர்ந்து அந்த ஊரில் வாழும் நபராகவே மாறியிருக்கும் மம்மூட்டி, ஊரின் டூரிங் டாக்கீஸில் 1973ல் வெளியான‘கெளரவம்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தக் காட்சியும் மிக முக்கியமானது. வழக்கு விவகாரம் ஒன்றில் ஏற்படும் மோதலில் ஒரு சிவாஜி வீட்டிலிருந்து வெளியேறும் காட்சியின் வசனங்கள் ஓடிக்கொண்டிருக்கும். ஒயின்ஷாப்பில் மது அருந்தியபடி மம்மூட்டி, அந்தப் படத்தின் காட்சிகளைத்தான் மோனோ ஆக்டிங் செய்துகொண்டிருப்பார்.
இதன்பின்னர், 1964-ல் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வெளிவந்த ‘புதிய பறவை’ திரைப்படத்தில் இடம்பெற்ற "பார்த்த நியாபகம் இல்லையோ" என்ற பாடல் வரும். ஆழ்மன சோகங்களை உந்தித் தள்ளி வெளியேற்றிவிடும் அந்தப் பாடலின் ஓபனிங் கோரஸ் மக்கள் மனங்களில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருப்பவை. நிறைவேறாத ஆசைகளோடு அந்த ஊரைச் சுற்றி வரும் சுந்தரத்தின் ஆன்மாவை பிரதிபலிக்க இந்தப் பாடலைத் தேர்வு செய்து சரியான இடத்தில் பிளேஸ் செய்திருக்கும் இயக்கநரின் ரசனை மெச்சத்தகுந்தது.
அதேபோல், வேறொருவரின் உடைகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் தான் அந்த மனிதர் இல்லை என்பதை மம்மூட்டி உணரும் காட்சிகளின், பின்னணியில் 1962-ல் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளிவந்த ‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் வரும் "மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" பாடலை பயன்படுத்தி தனது கதையின் நாயகனின் மனதையும், அவரது மனநிலையையும் பார்வையாளர்களுக்கு அழகாக விளக்கியிருக்கிறார்.
இறுதியாக இயல்புநிலைக்கு மம்மூட்டி திரும்பும் காட்சியில், 1962-ல் வெளிவந்த பாதகாணிக்கை திரைப்படத்தில் வரும் "வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?" என்ற பாடலைப் பயன்படுத்தி பார்வையாளர்கள் மனங்களை பட்டாசு வெடிக்கச் செய்திருப்பார். குறிப்பாக, இந்தப் பாடலுக்கு முன் வரும் தொகையறாவான, "ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன?" என்ற வரிகளிலிருந்தே இந்தப் பாடலை பயன்படுத்தி படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, விஷுவல் கம் மியூசிக்கல் ட்ரீட் கொடுத்திருப்பார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி.
இவைத் தவிர, கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட சில பக்திப் பாடல்களும், போர்ன்விட்டா, நிர்மா போன்ற விளம்பரங்களும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு யதார்த்தமான சினிமாவுக்கு இசை தேவை. அந்த இசை எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் அமைந்திருக்கிறது. பக்தி படங்களில் இருந்து வெளியேறி தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் வேறொரு களத்தில் பயணிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் வெளியான சில காலத்தால் அழிக்க முடியாத படங்களையும், பாடல்களையும் தமிழகத்தில் வாழும் பலரது ரெட்ரோ நினைவுகளை ரீங்கரிக்கச் செய்திருக்கிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தின் ரீரெக்கார்டிங்!
| வாசிக்க > ஓடிடி திரை அலசல் | நண்பகல் நேரத்து மயக்கம் - ஒலியும் ஒளியும், சில ‘தெளிவு’ அனுபவங்களும்! |
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago