அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகும் மலையாள சினிமா: 2023-ல் எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்கள்

By கலிலுல்லா

மலையாள சினிமா இந்த ஆண்டு தனது அடுத்த இன்னிங்ஸை களமாட தயாராகி வருகிறது. அந்த வகையில் மல்லுவுட்டில் எதிர்பார்க்கப்படும் படங்களில் பட்டியலைப் பார்ப்போம். இந்த ஆண்டு பான் இந்தியா, ஃபான்டஸி, 3டி என தனது புதுமுகத்தை அழுத்தமாக பதிவு செய்ய காத்திருக்கிறது மலையாள திரையுலகம்.

கிங் ஆஃப் கோதா: அபிலாஷ் ஜோதி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கிங்க் ஆஃப் கோதா’. கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. துல்கர் சல்மானே தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மே மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

பரோஸ்: ஜிஜோ புன்னூஸ் எழுத்தில் நடிகர் மோகன்லால் நடித்து இயக்கும் படம் ‘பரோஸ்’. மோகன்லால் இயக்கும் முதல் படம் என்பதால் மலையாள உலகைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடையேயும் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியிடப்பட உள்ளது. ஃபான்டஸியாக உருவாகும் இப்படம் குழந்தைகளுக்கானது என்றபோதிலும், பெரியவர்களும் ரசிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோவா மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்ட ‘பரோஸ்’ மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் என மோகன்லால் சமீபத்தில் அறிவித்தார்.

ஆடு ஜீவிதம்: இயக்குநர் ப்ளஸி எழுதி இயக்கும் படம் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். சர்வைவல் ட்ராமாவான இப்படத்திற்காக நடிகர் பிரித்விராஜ் 24 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த நஜீப் முஹம்மது (பிரித்விராஜ்) சவுதி அரேபியாவின் சித்திரவதை செய்யப்பட்டு ஆடுகளை மேய்ப்பவராக கட்டாயப்படுத்தப்படுகிறார். இதனை மையப்படுத்திய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதமே முடிவடைந்தது. படம் இந்தாண்டு திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டகொம்பன்: இயக்குநர் மேத்யூ தாமஸ் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுஷ்கா ஷெட்டி, பிஜூ மேனன் நடிக்கும் படம் ‘ஒட்டகொம்பன்’. கொச்சி, மங்களூரு மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படம் ஏராளமான ஆக்‌ஷனுடன் குடும்பத் திரைப்படமாக உருவாகி வருகிறது. படம் அதன் நடிகர்களால் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

நண்பகல் நேரத்து மயக்கம்: கேரள திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. 'ஆமென்', 'அங்காமலி டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ‘சுருளி’ என்ற படத்தை வெறும் 19 நாட்களில் எடுத்து முடித்தார். இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை லிஜோ ஜோஸ் இயக்கியுள்ளார். இந்த இருமொழிப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அண்மையில் கேரள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

மலைக்கோட்டை வாலிபன்: இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தைத் தொடர்ந்து மோகன்லாலுடன் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் மூலம் கரம் கோக்கிறார். அண்மையில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தாண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அதிக பட்ஜெட்டுடன் மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதல் தி கோர்: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பட புகழ் ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் படம் ‘காதல் தி கோர்’. மம்முட்டி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி கோலஞ்சேரி ப்ரூக்சைட் கிளப்பில் நடைபெற்றது. படபிடிப்பு செட்டுக்கு விருந்தினராக சென்ற நடிகர் சூர்யா படபிடிப்பு குழுவினருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றிருந்தார். அண்மையில் வெளியான படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.

எம்புரான்: நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' மலையாளத்தில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இதே கூட்டணி ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளது. பிருத்விராஜ் இயக்கும் இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சினிமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

ராம்: ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் ‘ராம்’. த்ரிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் சம்யுக்தா மேனன், அனூப் மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்