மலையாளத் திரையுலகில் வேலைநிறுத்தப் போராட்டம்: படங்கள் வெளியாவதில் சிக்கல்

டிசம்பர் 16-ம் தேதி முதல் மலையாளத் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் புதுப்படங்கள் வெளியீடு ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலக தயாரிப்பாளர்கள் & விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே போராட்டம் வெடித்துள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்களில் புதுப்படங்களின் வசூலில் முதல் வாரம் பாதிக்குப் பாதி கொடுப்பதைப் போல, இதர திரையரங்களும் கொடுக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் வைத்த கோரிக்கையை தயாரிப்பாளர்கள் & விநியோகஸ்தர்கள் சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

மேலும், இது தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் டிசம்பர் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் புதுப்படங்களின் வெளியீடு ஆகியவை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் அதனைத் தொடர்ந்து டிசம்பரில் மட்டும் சுமார் 20 படங்கள் வெளியாகவிருந்தது. இப்படங்கள் அனைத்துமே வெளியீட்டு தேதி முடிவு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலையாளப் படங்கள் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலப் படங்களின் வெளியீட்டில் எவ்வித பிரச்சினையுமில்லை. இதனால் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகவிருக்கும் 'சி3' படத்துக்கு கேரளாவில் அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மலையாளத் திரையுலகில் இப்பிரச்சினை தீர்க்க, தற்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE