காட்ஃபாதர் Review: அதீத பில்டப்புகளில் பொருத்தப்பட்ட அரசியல் டிராமா

By கலிலுல்லா

அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் 'காட்ஃபாதர்'. ஆந்திர முதல்வராக இருக்கும் பிகேஆரின் (சர்வதாமன் டி. பானர்ஜி) திடீர் மரணம் கட்சியையும், குடும்பத்தையும் உலுக்கி விடுகிறது. அவரது மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழ, போட்டிகள் பலமடைகின்றன. இதில் அரசியல் வாரிசுகளும், குடும்ப வாரிசுகளும் முந்திக்கொண்டு முட்டிக்கொள்கின்றனர்.

விறுவிறுப்பான இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் களத்துக்கு வெளியே நின்று காட்சிகளையும், ஆட்சியையும் மாற்ற காய் நகர்த்துகிறார் பிரம்மா (சிரஞ்சீவி). இறுதியில் பிரம்மா தான் நினைத்ததை சாதித்தாரா, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது யார் என்பதை சொல்லும் அரசியல் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம் தான் 'காட்ஃபாதர்'. அக்டோபர் 5-ம் தேதி படம் வெளியானாலும், தமிழ்நாட்டில் இன்று (அக்.14) தான் படம் வெளியிடபட்டுள்ளது.

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் ரீமேக் தான் இந்த 'காட்ஃபாதர்' என கூறப்பட்டாலும், படத்தின் இயக்குநர் மோகன்ராஜா கதைக்கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார். தெலுங்கு பொழுதுபோக்கு சினிமா பார்வையாளர்களுக்கான அந்த மாற்றங்கள் கைகூடியிருக்கின்றன.

படத்தின் முதல் பாதி கதாபாத்திரங்களாலும், அவர்களின் இரட்டை வேட குணநலன்களாலும் சூடுபிடிக்கிறது. உள்துறை அமைச்சரான வர்மா (முரளி சர்மா), பிகேஆரின் மருமகன் ஜெய்தேவ் (சத்யதேவ் காஞ்சரானா) கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதையின் சுவாரஸ்ய ஓட்டத்திற்கு பலம் சேர்க்கின்றன. இருப்பினும் சில இடங்களில் வில்லனாக ஜெய்தேவ் கதாபாத்திரத்தின் அழுத்தம் குறைவாக இருப்பதையும் உணர முடிகிறது.

தன்னைச் சுற்றி பூகம்பமே வெடித்தாலும், அசால்ட்டான தனது உடல்மொழியில், குறைவான வசனங்களுடன், முக பாவனைகளாலும், உணர்ச்சிகளாலுமே எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிறார் சிரஞ்சீவி. மாஸ் என்டர்டெயினருக்கான தீனியை ரசிகர்களுக்கு தேவைக்கு அதிகமான அளவில் கொடுத்து தனது கரீஷ்மாவால் ஈர்க்கிறார். தனது தங்கையிடம் 'அம்மா' என சொல்லும் காட்சிகளில் உருக வைக்கிறார். சிரஞ்சீவி ரசிகர்களுக்கு இப்படம் பக்காவான அரசியல் ட்ரீட் தான்!

கண்ணியமான தோற்றத்தில், அலட்டிக்கொள்ளாத நடிப்பில், கண்களாலேயே மிரட்டும் காட்சிகள் என நயன்தாராவின் கதாபாத்திர பொருத்தம் கச்சிதம். சல்மான் கதாபாத்திரம் பாலிவுட் ரசிகர்களுக்காகவே திணிக்கப்பட்ட உணர்வைக்கொடுக்கிறது. அந்தக் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் பெரிய பாதிப்பு திரைக்கதையில் ஏற்பட்டிருக்காது. அவர் வரும் காட்சிகளில் சிஜி படுமோசம். இவர்களைத் தவிர்த்து சமுத்திரக்கனி, முரளி சர்மா, தான்யா ரவிச்சந்தர், சுனில் ஆகியோரின் திரைக்கதையின் பசிக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

பொறுமையாக நகரும் படத்தில் ஆங்காங்கே சில சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து ரசிக்க வைக்கிறார் மோகன்ராஜா. சிரஞ்சீவிக்கு கட்சி முதல் காவல் துறை வரை சென்ற இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு பெருகி வழிகிறது. ஆனால், அவர் இந்த மக்களுக்கு என்ன செய்தார், கண்ணசைவில் காவல் துறை அவருக்கு அடிபணிய காரணமென்ன என அதற்கான பின்புலங்கள் ஆராயப்படாமல் மேலோட்டமாக சொல்லியிருப்பது 'மாஸ்' என கடக்க பயன்படுகிறதே தவிர, காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கவில்லை. அதேபோல சைலண்டாக வைலன்ட் செய்யும் சிரஞ்சீவி அடுத்து என்ன செய்யபோகிறார் என்ற ஆர்வத்தை தூண்டியிருப்பது, அதற்கேற்ற சில சர்ஃப்ரைஸ் காட்சிகளும் ஈர்ப்பு. பாடல்கள் தேவையில்லாத திணிப்பு. போலவே சண்டைக்காட்சிகளும்!

சிரஞ்சீவிக்கு தனது இசையால் முடிந்த அளவிற்கு கூஸ்பம்ஸ் தருணங்களை உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார் தமன். அவை சில இடங்களில் நன்றாக கைகொடுத்திருக்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், சிரஞ்சீவி, சல்மானுக்கான ஃப்ரேம்களும் ரசிகர்களுக்கான கண்கவர் விருந்து. சிரஞ்சீவிக்கு பெரிதாக கஷ்டம் கொடுக்காமல் உருவாக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சிகளும், பிரபுதேவாவின் நடன அமைப்புகளும் கவனம் பெறுகின்றன.

மொத்தத்தில் அரசியல் த்ரில்லர் கதையை பெரிய அளவிலான திருப்பங்கள் எதுவுமில்லாமல், தெலுங்கு பொழுதுபோக்கு சினிமா ஆடியன்ஸ்களுக்காகவும், சிரஞ்சீவி ரசிகர்களுக்காவும் பிரத்யேகமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார் மோகன்ராஜா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE