“நீங்கள் இல்லாத துயரில் இதயம் கனத்துவிட்டது” - இயக்குநர் சச்சிக்காக விருது பெற்ற மனைவி உருக்கம்

By செய்திப்பிரிவு

''அன்புள்ள சச்சி... என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது, அதேசமயம் நீங்கள் இல்லாத துக்கத்தால் கனத்துவிட்டது'' என அவரது மனைவி சஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். சிறந்த இயக்குநராக சச்சிக்கு (அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்) விருது வழங்கப்பட்டது. இயக்குநர் சச்சி மறைந்ததை அடுத்து, அவரது மனைவி சஜி இந்த விருதை பெற்றார். அப்போது கண்ணீர் மல்க விருதை பெற்றுக்கொள்ள அரங்கத்தில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது.

இதே அய்யப்பனும் கோஷியும் படத்தில் ''களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்'' என்ற பாடலை பாடிய நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் (பெண்) பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. விருதை அவர் பெற வரும்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்துநின்று கைதட்டி அவரை வரவேற்றனர். இதனால் அரங்கமே அதிர்ந்தது. அரங்கமே அதிர்ந்த சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே விருது வாங்கினார் நஞ்சியம்மா.

இந்நிலையில், இது தொடர்பாக மறைந்த இயக்குநர் சச்சியின் மனைவி சஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''நீங்கள் ஒருமுறை நாம் இந்திய குடியரசுத் தலைவருடன் இணைந்து உணவருந்துவோம் என்று கூறினீர்கள். என் நெற்றியில் முத்தமிட்ட பிறகு தேசிய விருதை நீங்கள் பெறுவீர்கள் என்றிருந்தபோது, இன்று அந்த முத்தத்தை உங்களிடமிருந்து பெறாமலேயே உங்கள் சார்பாக தேசிய விருதை ஏற்றிருக்கிறேன். உலகமே கைதட்ட வேண்டும் என நீங்கள் விரும்பிய பாடலும், அதன் பாடகி நஞ்சியம்மாவும் இன்று உலகின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆம், நீங்கள் உண்மையில் வரலாற்றைத் தேடவில்லை; உங்களைத் தேடி வந்தவர்களுக்காக நீங்கள் ஒரு வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இன்று அந்த வரலாற்று தருணம்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கல்வியறிவற்ற, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாடசி நஞ்சியம்மா குடியரசுத் தலைவரிடம் இருந்து விருது பெறும் அந்த வரலாற்று தருணத்திற்கு நாங்கள் சாட்சியாக இருப்போம். அதோடு, ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற ரத்தினத்தை உருவாக்கி, நஞ்சியம்மா போன்ற ஒரு திறமையைக் கண்டறிந்ததற்காக உங்கள் சார்பில் நான் விருதை பெறுகிறேன்.

அன்புள்ள சச்சி... என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது, அதே சமயம் நீங்கள் இல்லாத துக்கத்தால் கனத்துவிட்டது. இந்த தருணத்தை நீங்கள் சொர்க்கத்திலிருந்து பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் கண்ட கனவுகள் நனவாகிவிட்டன. நீங்கள் கண்ட கனவை நோக்கி நான் என் பயணிக்க இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE