பாகுபலி 2-க்காக அசத்தல் திட்டங்கள்: ராஜமெளலி தகவல்

By ஸ்கிரீனன்

'பாகுபலி - தி கன்க்ளூஷன்' படத்துக்கான பல்வேறு பிரம்மாண்ட விளம்பரப்படுத்தும் திட்டங்களை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

இந்தியளவில் மட்டுமன்றி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது.

ஏப்ரல் 28, 2017ல் வெளியாக இருக்கும் இப்படத்தின் படக்குழு ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. இதில் தயாரிப்பாளர் ஷோபு, இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ், ராணா ஆகியோர் பங்கேற்றனர். இதில் 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் லோகோ வெளியிடப்பட்டது.

இச்சந்திப்பில் பேசிய இயக்குநர் ராஜமெளலி, "டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க இருக்கிறோம். சில காட்சிகள் மற்றும் 2 பாடல்கள் மட்டும் காட்சிப்படுத்த இருக்கிறது. ஏப்ரல் 28, 2017ல் இப்படம் வெளியாகும்.

அமேசன் இணையத்தில் 'பாகுபலி' அனிமேஷன் தொடருக்கான டீஸர் வெளியாகி இருக்கிறது. மேலும் பிரபாஸ் பிறந்த நாளான அக்டோபர் 22ம் தேதி 'பாகுபலி தி கன்க்ளூஷன்' பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட இருக்கிறது.

'பாகுபலி' என்பது வெறும் படம் மட்டுமல்ல. ஒரு பெரிய மரத்துக்கு எப்படி நிறைய கிளைகள் இருக்கிறதோ, அது போன்று இப்படத்துக்கும் அனிமேஷன் தொடர்கள், காமிக் புத்தகங்கள், விளையாட்டு மற்றும் மெய்நிகர் உண்மை அனுபவம் என இருக்கிறது. மேலும் 360 டிகிரி கோணத்துக்கான படங்கள் மற்றும் உருவான விதம் அனைத்துமே உங்களது போனில் கிடைக்கும்.

அதே வேளையில், அனிமேஷன் தொடர்கள் மற்றும் காமிக் புத்தகங்கள் ஆகியவை வெவ்வேறு கதைகளை உள்ளடக்கியது. அதற்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இருக்காது.

மேலும், இப்படத்துக்காக சுமார் 200 திரையரங்குகளில் மெய்நிகர் உண்மை அனுபவம் கொண்ட அறை ஒன்றை நிறுவ இருக்கிறோம். இதற்கு மட்டும் ரூ.25 கோடி செலவாகும். இதற்கான தொடக்க விழா அக்டோபர் 23ம் தேதி நடைபெறும். படம் வெளியாகும் ஒரு மாதத்துக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE