முதல் பார்வை | மலையன்குஞ்சு - மலைக்கவைக்கும் ஃபஹத், வலி கடத்தும் ரஹ்மான் மற்றும் பல..!

By கலிலுல்லா

இழப்பினால் ஏற்பட்ட வலியும், மனிதர்கள் மீதான அசௌகரியமும் எதிர்பாராத விபத்தின் மூலமாக அவனை மீண்டும் எப்படி மீட்டெடுக்கிறது என்பதுதான் ஒன்லைன்.

மின்சாதனங்களை பழுதுபார்க்கும் அனில்குமார் எனும் அனிக்குட்டன் (ஃபஹத் பாசில்) கேரளாவின் மலைக்கிராமம் ஒன்றில் தாயுடன் வசித்து வருகிறார். அது ஒரு மழைக்காலம் என்பதால், அரசு தரப்பிலிருந்து மக்கள் வெளியேறி முகாம்களில் தங்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதனை வெறும் பயமுறுத்தும் சங்கதியாக நினைத்து, முகாமுக்கு செல்ல மறுக்கும் அனிக்குட்டன் நிலச்சரிவு ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்.

அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார், அவருடன் சேர்ந்து சிக்கியவர்களின் நிலை என்னவானது என்பது தான் படத்தின் திரைக்கதை. இதை படிக்கும்போது, மிகவும் சாதாரண கதையாக தோன்றலாம். காலம் காலமாக இப்படியான சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளால் மிரட்டி வருகிறார்கள் மலையாள இயக்குநர்கள். அந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருக்கும் மற்றொரு படம்தான் 'மலையன்குஞ்சு'.

அனில்குமாராக ஃபஹத் பாசில். சுற்றிலும் சிதைந்து கிடக்கும் பொருட்கள், மாட்டிக்கொள்ளும் கால், கைகளை பயன்படுத்தாமல் வெறும் முகத்திலிருந்து மட்டுமே வலியையும், வேதனையையும், பயத்தையும் கடத்தியாகவேண்டும். எல்லாவற்றையும் கண்களிலிருந்தும் முகத்திலிருந்தும் கச்சிதமாக கடத்திவிட்டு, நம்மையும் அந்த குழிக்குள்ளேயே இழுத்துச் செல்லும் அசுர நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதற்கான அவரது மெனக்கெடல் அவ்வளவு எளிதானதல்ல!

மொத்தப் படத்தையும் தன்னுடைய நடிப்பு எனும் அச்சாணியால் கெட்டியாக பிடித்திருக்கிறார். தவிர ரஜிஷா விஜயன், இந்திரன்ஸ், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோர் வந்து செல்கின்றனர்.

அது ஒரு ரோலர் கோஸ்ட் போன்ற வழக்கமாக சுழலும் ஒரு வாழ்க்கை. அதை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தும்போது, நிச்சயம் அயற்சி ஏற்படுத்தும். அந்த அயற்சியிலிருந்து மீட்கும் மீட்பன் தான் எழுத்து. மகேஷ் நாராயணனின் எழுத்து உங்களை எந்த இடத்திலும் அந்த அயற்சிக்கான இடத்தை தராது. அந்த வாழ்க்கையின் ரசிக்கும்படியான அம்சங்களும், அனிக்குட்டனின் கதாபாத்திர கட்டமைப்பும் அவ்வளவு எளிதில் திரையிலிருந்து நம்மை விலக விடுவதில்லை.

உண்மையில், பெரும்பாலான மலையாள திரைப்படங்களின் எழுத்துகள் போற்றப்பட வேண்டியவை. மற்ற சினிமாக்கள் பான் இந்தியா, சரித்தரக் கதை, கேங்க்ஸ்டர் என துப்பாக்கியைத் தேடிக்கொண்டிருக்கும் சூழலில், அங்கே அவர்கள் பேனாவில் யதார்த்த உலகத்தை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த உலகம் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் உலாவரும் பிராந்தியம். குறிப்பாக, மனித உணர்வுகளை பிணைத்து எழுதும் எழுத்துக்கு கனம் அதிகம். அப்படித்தான் இந்தப் படத்தை எழுதியிருக்கிறார் மகேஷ் நாராயணன். கூடவே ஒளிப்பதிவிலும் மிரட்டியிருக்கிறார். 'ஆன்ராய்டு குஞ்சப்பன்' படத்தில் உதவி இயக்குநராக இருந்த சஜிமோன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முன்பே சொன்னது போல படத்தின் முதல் பாதி ஸ்லோ என்று சொன்னாலும், அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாறாக, நாயகனைப் பற்றி புரிந்துகொள்வதற்கான தருணங்களாகவே உருமாருகிறது. நாயகனுக்கு முதல் பாதியில் எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு குழந்தையின் அழுகுரல், இரண்டாம் பாதியில் அதே குழந்தையின் அழுகை எந்த தொந்தரவும் செய்யவில்லை. இந்த இரண்டுக்குமான இடைவெளிதான் மொத்தப் படம்.

நிலச்சரிவு என்பது உணர்வுகளுக்கு மேல் பூசப்பட்ட ஒரு அரிதாரமே தவிர, அவர்களின் நோக்கம் அன்றாட மனங்களின் மாற்றங்கள் மட்டுமே. சில இடங்களில் கவிதையைப்போல காட்சிப்படுத்தபட்டுள்ளன. பல இடங்களில் இசை மட்டுமே பேசுகிறது. அங்கே வசனங்கள் மௌனித்து கிடப்பதால் திரையுடன் எளிதாக ஒட்ட முடிகிறது.

படத்தில் கலை இயக்கத்தின் வேலை அபரிவிதமானது. திரைக்கு பின்னால் குழுவின் மிகப்பெரிய வேலை அடங்கியிருப்பதை உணர முடிகிறது. ஒரு டார்ச்சை மட்டும் வைத்துக்கொண்டு புதைக்குழிக்குள் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்தாக வேண்டும். ஃபஹத்துக்கு நிகரான உழைப்பை கொடுத்து படமாக்கியிருக்கிறார் மகேஷ் நாராயணன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வலியின் கனத்தை கூட்டுகிறது. இறுதியில் வரும் பாடல், நம்மை உருக வைத்து அனுப்புகிறது. என்னதான் பிரியாணி சாப்பிட்டாலும், இறுதியில் சாப்பிடும் ஸ்வீட்டின் சுவை நாக்கில் ஒட்டுவது போல, அந்தப் பாடல் ஒட்டுமொத்த மனதுடன் ஒட்டிவிடுகிறது.

எழுதுவதைக் காட்டிலும் பார்த்து அனுபவிப்பதற்கான வாய்ப்பையை மலையாள படங்கள் கொடுக்கும். அப்படியான படம் தான் 'மலையன்குஞ்சு'. குறைகளாக பார்த்தால், பெரிய அளவில் இல்லை என்றாலும், சில நம்புவதற்கு கடினமான காட்சிகளும் இடம்பெற்றிருப்பது நெருடல். நிலச்சரிவுக்குள் சிக்கி போராடும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம் என தோன்றுகிறது.

மொத்தத்தில் 'மலையன் குஞ்சு' எழுதி புரியவைக்கும் படமல்ல. மாறாக பார்த்து அனுபவிக்க வேண்டிய தேர்ந்த திரைமொழியுடன் கூடிய படைப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE