முதல் பார்வை | விராட பர்வம் - சாய் பல்லவியால் ‘தப்பும்’ தடுமாற்றப் படைப்பு!

By கலிலுல்லா

நக்ஸ்லைட்களை பின்னணியாக கொண்ட காதல் கதையை உருவாக்க முயற்சித்திருக்கும் படைப்பாக வெளியாகியிருக்கிறது 'விராட பர்வம்'.

1990களில் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் வாழும் வெண்ணிலா (சாய் பல்லவி) நக்ஸலைட்ஸ், கம்யூனிசம் தொடர்பான புத்தகங்களால் ஈர்க்கப்படுகிறார். தொடர்ந்து வாசிக்கும் அவர், புத்தகங்களைக் கடந்து, அதை எழுதிய ராவண்ணா (ராணா டகுபதி) மீது காதல் கொண்டு, அவரை பின் தொடர நினைக்கிறார். அவருடன் இணைந்து வாழ ஆசைப்படும் வெண்ணிலா, வீட்டை விட்டு வெளியேறி, நக்ஸைலட் குழுவின் கமாண்டராக இருக்கும் ராவண்ணாவை தேடி தனியொரு பெண்ணாக பயணிக்கிறார்.

அந்தப் பயணத்தின் முடிவில் அவர் ராவண்ணாவை சந்தித்தாரா? வெண்ணிலாவின் காதல் என்னவானது? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடுகிறது 'விராட பர்வம்' படத்தின் திரைக்கதை.

வெண்ணிலாவாக சாய் பல்லவி. தனக்கு தேவையானதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என பிடிவாதம் கொண்ட கதாபாத்திரம். அப்பாவி பெண்ணாக, காதலியாக, சமயங்களில் தோட்டாக்களை தெறிக்கவிடும் சிங்கப்பெண்ணாக, ஒட்டுமொத்த படத்தையும் தன் நடிப்பால் தாங்கியிருக்கிறார். படம் முழுக்க அவரை சுற்றியே நகர்வதை கணக்கில் கொண்டு பிசிறு இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ராவண்ணா கதாபாத்திரத்தில் ராணா டகுபதி. உயரம் மற்றும் உடலமைப்பால் நக்ஸலைட் கமாண்டர் கேரக்டருக்கு பக்கவாக பொருந்தியிருக்கிறார். பெரிதாக அலட்டிக்கொள்ளாத நடிப்பு மற்றும் இறுதிக்காட்சியில் கவனம் பெறுகிறார். மேலும், வழக்கமான ஹீரோ டெம்பளேட்களுக்குள் அவரை உட்படுத்தியிருக்கிறது இயக்குநரின் எழுத்து.

இவர்களைத் தவிர்த்து பிரியாமணி, நந்திதா தாஸ் ஆகியோரின் கதாபாத்திரங்களை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது. ஈஸ்வரி ராவ் வரும் காட்சிகள் கவனம் பெறுகின்றன. நிவேதா பெத்துராஜ் கேமியோ ரோலில் வந்துசெல்கிறார்.

தெலுங்கு சினிமாவில் நக்ஸலைட்களை மையம் கொண்ட கதை என்ற களமே புதிதாக இருந்தது. 1990களில் நடந்த உண்மை ச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, தன்னுடைய கற்பனைகளையும் சேர்த்து 'விராட பர்வம்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் வேணு உடுலா.

தெலங்கானவின் வாரங்கல் பகுதியில் வசித்துவந்த 'சரளா' என்ற பெண் 1992-இல் தனது படிப்பை விட்டுவிட்டு, நக்சலைட்டுகளுக்கான போராளிக் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், ஒரு மாதம் கழித்து சரளா மர்மமான முறையில் நக்சல்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் வகையில் இந்தப் படத்தை இயக்கியிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார்.

படம் தொடங்கிய முதல் ஒரு மணிநேரம் ஆர்வத்துடனும், சில சுவாரஸ்யமான காட்சிகளுடனும் கதையை நகர்த்திருக்கிறார் இயக்குநர் வேணு உடுகுலா. ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு, படம் நகராமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. தொடக்கத்தில் ஈர்க்கும் ராணா மீதான சாய் பல்லவியின் காதல் அதே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதால் தெகட்டி விடுகிறது.

'ராவண்ணாவை பார்க்க வேண்டும், ராவண்ணாவை பார்க்கவேண்டும்' என அங்கிருப்பவர்களை மட்டுமல்லாமல், திரையரங்குளிலிருக்கும் பார்வையாளர்களையும் சேர்த்தை டார்ச்சர் செய்கிறார். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சாய் பல்லவியிடம், 'ராவண்ணாவை ஏன் காதலிக்கிறாய்?' என்று கேட்க, அதற்கு அவர், 'காதலிக்க காரணம் வேண்டுமா?' என கேட்கிறார்.

படம் முழுக்க முழுக்க காதலைச் சார்ந்திருக்கும்போது, வீட்டை விட்டு வெளியே வந்து, தன் உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு ராணாவை சாய்பல்லவி காதலிப்பதற்கான காரணம் ஆழமாக இல்லாதது காட்சிகளுக்கான நியாயத்தை சேர்க்க தவறிவிட்டது. புத்தகங்களால் ஈர்க்கப்பட்டார் என வைத்துக்கொண்டாலும், படத்தின் பிரதான கதாபாத்திரம் சித்தாந்தங்களைக் கடந்து எழுதியிருக்கும் எழுத்தாளர் மீதான ஈர்ப்பு கொள்வது ஒரு வலிமையான கதைக்களத்திலிருந்து நழுவி விடுகிறது.

படம் நக்ஸலைட்களின் போராட்டம் குறித்தும், அவர்களுக்கும் காவல் துறைக்குமான சண்டைக் காட்சிகள் குறித்தும், அதிகார மோதல்கள், துஷ்பிரயோகம் குறித்து எந்த விளக்கத்தையோ, புரிதலையோ கொடுக்கவில்லை. மாறாக அவற்றை ஸ்கிப் செய்துவிட்டு, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலோட்டமான படைப்பாக உருவாகியிருக்கிறது. முக்கியமான அரசியல் புரிதலுக்கான படமாக உருவாகியிருக்க வேண்டியது, காதல் படமாக சுருங்கி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சில இடங்களில் நக்ஸலைட்கள் தான் எங்களை காப்பாற்றினார்கள்,

நக்ஸலைட்டைச் சேர்ந்த பெண்களை கைது செய்த காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என மேலோட்டமான வசனங்களால் கடந்து சென்று, அழுத்தமான காட்சிகள் வைக்க தேவையான இடங்களை வீணடித்திருக்கிறார்கள். மாறாக, சுற்றியும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், ராணாவும், சாய்பல்லவியும் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் திரையிலிருந்து முற்றிலுமாக நம்மை துண்டித்து விடுகிறது.

ஒரு பெண்ணுக்கு நடந்த பாதிப்பையும், உண்மைச் சம்பவத்தையும் வெகுஜன பலம் மிக்க ஊடகமான சினிமாவில் பதிவு செய்ய வேண்டும் என இயக்குநரின் எண்ணம் பாராட்டுதலுக்குரியது. ஆனால், அந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு கட்டமைக்கும் காட்சிகளுக்கும், சொல்ல வேண்டிய பிரச்னைகளுக்கும், திரைமொழிக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

டானி சான்செஸ்-லோபஸ், திவாகர் மணி இருவரின் ஒளிப்பதிவு காடுகளுக்குள் பயணிக்கும் உணர்வை தருகிறது. சுரேஷ் பொப்பிலி பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. ஸ்ரீஹர் பிரசாத் எடிட்டிங் விறுவிறுப்பு காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

மொத்ததில் 'விராட பர்வம்' நக்ஸலைட் கதைக்களத்துக்கும், காதல் படைப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்டு இரண்டுக்கும் நியாயம் சேர்க்கத் தவறிய படைப்பாக மாறியிருக்கிறது.

வீடியோ வடிவில் விமர்சனத்தைக் காண :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்