வங்கிக் கடனை வசூலிப்பதில் ஏழைகளுக்கும், பணம்படைத்த தொழிலதிபர்களுக்கும் இடையே நிகழ்த்தப்படும் பாகுபாடு, அரசின் கண்மூடித்தனம் ஆகியவையே படத்தின் ஒன்லைன்.
வங்கியிலிருந்து தான் கடனாக வாங்கிய 15ஆயிரம் ரூபாயை திருப்பிச் செலுத்த முடியாமல் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார் மகேஷ் பாபுவின் தந்தை. அவர் விட்டுச் சென்ற ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு, படித்து முன்னேறி, அமெரிக்காவில் தனியாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு முன்னேறுகிறார் மகேஷ்பாபு. இடையில் அவரிடம் வந்து 10,000 டாலரை கடனாக வாங்கும் கீர்த்தி சுரேஷ், அதை தர மறுத்து, தன் தந்தையை வைத்து மிரட்டுகிறார். எப்படியாவது தன் பணத்தை திரும்ப பெறும் நோக்கில் இந்தியா திரும்பும் மகேஷ், கீர்த்திசுரேஷின் தந்தையிடம் சண்டையிட, அது மீடியா வெளிச்சம் பெற, ஒரு கட்டத்தில், தனக்கு சேர வேண்டிய கடன் 10000 டாலர் அல்ல, 10000 கோடி என மகேஷ் பாபு கூறியதைக்கேட்டு 'கந்தர்வகோட்டை சமஸ்தானமே' ஆட அதற்கான காரணத்தை விளக்குவது தான் 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் மீதிக்கதை.
வட்டிக்கு பணம் கொடுக்கும் மகேஷாக திரையில் ஜொலிக்கிறார் மகேஷ்பாபு. துள்ளலான இளமையுடன், ஹேண்ட்சம் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கிறார். ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதை கொடுத்து அவர்களை திருப்திபடுத்திருக்கிறார். பாடல்களில் நடனமாடும் காட்சிகளில் அப்லாஸ் அள்ளுகிறார். அலுப்பான திரைக்கதையில், படத்தின் மீட்பராக தோன்றும் அவர், முகத்தில் கொஞ்சம் கூடுதல் எக்ஸ்பிரஷன்ஸ்களை காட்டியிருக்கலாம். அது மட்டும் மிஸ்ஸிங்!. மகேஷ் பாபு கதாபாத்திரத்தை எழுதிய விதத்தில் இயக்குநர் நம்மை ஏமாற்றவில்லை.
'கலாவதி'யாக கீர்த்தி சுரேஷ். 'காலாவதியான' ஒரு பெண் கதாபாத்திரம். எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாமல், போகிற போக்கில் எழுதப்பட்டது போல உணர வைக்கிறார். மகேஷ் பாபுவுக்கு இரவில் தூங்கும்போது கால் போடுவதற்கும், வீட்டில் சமைக்கவும், துணி துவைக்கவும் அவ்வப்போது காதலுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். தொடக்கத்தில் நெகட்டிவாக காட்டப்படும் இந்த கதாபாத்திரத்தில், ஓரிடத்தில் மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷை அறையும் போது, ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி ஆர்பரிக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவை திட்டும்போது கொந்தளிக்கிறார்கள். ஒரு ஆணுக்கான பண்டமாக, மிகவும் மோசமாக அந்த கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியான பெண் கதாபாத்திரங்களை வடிவமைக்கப்போகிறீர்கள் தெலுங்கு இயக்குநர்களே?. உண்மையில் ஒரு நல்ல நடிகரை (கீர்த்தி சுரேஷ்) வீணடித்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்திற்கு தமிழிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார் சமுத்திர கனி. மாஸாக காட்ட முயற்சி செய்து தமாஸாக்கிருக்கிறார்கள். மகேஷ்பாபுவைக் கடந்து படத்தில் எந்த கதாபாத்திரமும் ஒட்டவேயில்லை.
'வங்கியிலிருந்து கடன் வாங்கி மாதத்தவணை செலுத்தும் ஏழைகளுக்குத்தான் எல்லா கெடுபிடியும். பணக்கார, முதலாளிகளுக்கு அல்ல' என்ற அடர்த்தியான கதைக்கருவை தேர்வு செய்த விதம் சிறப்பு. வங்கிக் கடன் மோசடிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள் மீது அரசு கண்மூடித்தனமாக இருப்பது, தனது சொந்த மக்களை அரசே ஏமாற்றுவது, உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டுக் காட்ட முயற்சிக்கிறது சர்க்காரு வாரி பாட்டா. ஈஎம்ஐ கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் குடும்பங்கள் என தேர்வு செய்யப்பட்ட கதைக்களம் ஓகே. ஆனால், அந்த அடர்த்தியான கதையை, அழுத்தமான எழுத்துகளாலும், சுவாரஸ்யமான திரைக்கதையாலும் பார்வையாளருக்கு கடத்த முடியாமல் இயக்குநர் பரசுராம் திணறியிருக்கிறார்.
பெற்றோர் இறந்த பிறகு, மகேஷ்பாபு எப்படி அமெரிக்கா சென்றார், நிதி நிறுவனத்தை தொடங்கும் அளவுக்கு எப்படி பணத்தைச் சேர்த்தார்? என்ற எந்த பின்கதையும் சொல்லப்படவில்லை. மத்திய அரசுடன் நெருக்கத்தில் இருக்கும் ஒரு எம்.பியை மிரட்டுவது, அவரது வீட்டிற்கே லாரி எடுத்துக்கொண்டு சென்று அதகளம் செய்வது, எஸ்.பி.ஐ வங்கி மேனேஜரை கன்னத்தில் அறைந்து அலறவிடுவது, அனைத்து வங்கி கிளைகளையும் ஒரே ஆளாக சீல் வைத்து விளையாடுவது, எத்தனை பேர் வந்தாலும் தனி ஆளாக அடித்து துவம்சம் செய்துவிட்டு, பிஜிஎம் ஒலிக்க ஸ்லோமோஷனில் நடந்து செல்வது என 'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு' என கேட்கவைக்கிறார்.
அதேபோல, அந்த பூமித்தாய் மீது கொஞ்சம் கருணைக்காட்டியிருக்கலாம். எதிரிகளை பூமியில் போட்டு அடித்து துவைப்பது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஆன் ஏரில் பறந்துகொண்டே அட்டகாசம் செய்வது, என பார்வையாளர்கள் மீதும், பூமித்தாயின் மீதும் படக்குழு கருணைக்காட்டவில்லை. முதல் பகுதியில் இன்ட்ரவலைத்தேடும் பார்வையாளர்கள், இரண்டாம் பகுதியில் எக்ஸிட் கதவுக்கு அருகே சென்றுவிடுகிறார்கள். கொஞ்சமும் லாஜிக் இல்லாத நாடகத்தனமான காட்சிகளால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.
தமன் இசையில் 'கலாவதி' பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை சில இடங்களில் மட்டும் ஓகே என்றாலும், பல இடங்களில் காது வலியைத் தருகிறது. அமெரிக்காவின் கட்டிட அழகையும், பாடல்காட்சிகளிலும் மதியின் ஒளிப்பதிவு தனியே தெரிகிறது. தொழில்நுட்ப ரீதியாக பெரிய குறை இல்லை, ஆனால் சண்டைக்காட்சிகள் தெலுங்கு சினிமாவுக்கான மெச்சூரிட்டி அதிகம் தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது. இயக்குநரிடம் பேசி, எடிட்டர் மார்த்தாண்டன் கே.வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளில் கறார் காட்டியிருக்கலாம்.
மொத்ததில் நல்லதொரு வண்டியில் ஏறி, போக வேண்டிய இடத்தின் மேப்பையும் கையில் வைத்துக்கொண்டு, வண்டியை சரியாக இயக்கத் தெரியாத காரணத்தால் விபத்தாகியிருக்கிறது, 'சர்காரு வாரி பாட்டா'!
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago