கருப்பு நிற இருள் படிந்த அந்தக் காட்சியில் 'எனக்கு ஒரு வாக்கு கொடு' என சுவற்றில் சாய்ந்தபடியே ராக்கியை நோக்கி பேசும் அவரது தாய். ''நீ எப்படி வாழப்போறீயோ எனக்குத் தெரியாது. ஆனா, சாகும்போது இந்த உலகமே மதிக்கிற பெரிய பணக்காரனாத்தான் சாகணும்'' என்பார். 'பெரிய பணக்காரனாகி காட்றேன்மா' என உறுதியளிப்பான் ராக்கி. அதை அப்படியே கட் செய்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கு சென்றால், தாலாட்டு பாடும் தன் தாயிடம், 'உனக்கு தங்கம்னா பிடிக்குமா மா?' என அப்பாவியாக கேட்பான் ராக்கி.
'தங்கம்னா எந்த பொண்ணுக்குத்தான் பிடிக்காது' என ஒருவித ஏக்க மனநிலையில் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவார் அவரது தாய். உடனே ''இந்த உலகத்துல இருக்குற எல்லா தங்கத்தையும் உனக்கே தரேம்மா'' என பேசும் ராக்கியின் வசனத்தை ஏதோ குழந்தை தனத்தில் கூறியிருக்கிறான் எனக் கடந்திருப்போம். ஆனால், அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது படம் முடியும் போது உணர வைத்திருப்பான் ராக்கி. அவனது அதிகபட்ச இலக்கே இந்த இரண்டு தான். அதற்காகத்தான் இந்த ஒட்டுமொத்த போராட்டமும்! இல்லையென்றால் கேஜிஎஃப் கதையின் தேவையே எழுந்திருக்காது.
தாயிடம் கொடுக்கும் இந்த இரண்டு வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் தான் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகத்தின் கதைகளும். சுரங்கத்தில் அடிமையாக உழல்பவர்களை மீட்பது, கருடனைக் கொல்வது, கேங்க்ஸ்டராக உருவெடுப்பது, இது எல்லாமே துணைக்கதைகள் தானே தவிர, அடிப்படையில் கேஜிஎஃப் ஒரு தாயின் வாக்குறுதியை நிறைவேற்ற போராடும் மகனின் கதைதான். அன்னையர் தினத்தில் கேஜிஎஃப் படத்தைப்ப்பற்றி குறிப்பிடுவது சாலப்பொருத்தமானதும் கூட.
» ’அகிலம் நீ..’- அன்னையர் தினத்தையொட்டி வெளியான 'கேஜிஎஃப்-2' வீடியோ பாடல்
» 'என்னுடைய எல்லாமே நீ தான்!' - அன்னையர் தினத்தில் காஜல் அகர்வால் நெகிழ்ச்சி
படத்தில் 'தீரா தீரா' பாடலைக்காட்டிலும், 'தந்தானே நானே தானின்னானே' பாடலுக்குத்தான் ஜீவன் அதிகம். இந்த இரண்டு பாடல்களின் வழியே கூட நாம் ஒட்டுமொத்த படத்தையும் அணுகலாம். 'தீரா தீரா வாள் வீசும் கரிகாலா' அந்த நேரத்துக்கான ஹீரோயிசம் அவ்வளவே! 'தந்தானே நானே' ஒரு அபலைத்தாயின் போராட்டம். படத்தின் ஒட்டுமொத்த ஆன்மா அது. படத்தை இரண்டு பாகமாக பிரித்துப்பார்த்தால். ஹீரோயிஸம் மேலே தூவப்பட்ட அலங்காரம் தான்; அந்த ஹீரோயிசத்துக்கான தேவையையும், அதனை கட்டமைத்து எழுப்பியதும் ஒரு தாயின் கனவுக்கற்கள். அந்த கற்கள் ஒரு நாளில் எழுப்பபடவில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக வலியிலும், வேதனையிலும், தனிமையில் கட்டிஎழுப்பப்பட்டது.
ஆராய்ந்து பார்த்தால், ராக்கிக்கு கேஜிஎஃப்க்குள் நுழைவதற்கான எந்த தேவையுமில்லை, என்னதான் வேணும் உனக்கு என கேட்கும்போது 'இந்த உலகம்' என அவன் கூறும் எல்லாவற்றிற்கும் அடிநாதமாக அவனுக்கு இருந்தது தாயிடம் அளித்த அந்த உறுதிமொழி மட்டுமே!. அது போகிற போக்கில் கொடுக்கப்பட்டதல்ல. ஒரு தாயின் வலியும், ஏக்கமும், இயலாமையாலும் வடிந்த கண்ணீரிலிருந்து பிறந்த வாக்குறுதி!.
'தாயைவிட பெரிய சக்தி இந்த உலகத்துல எதுவமே இல்ல' என வெறுமனே தாய்ப்பாசத்தால் மட்டுமே ராக்கி கூறிவிடவில்லை. 14 வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டவள் சாந்தம்மா (ராக்கியின் தாய்). 15 வயதில் ராக்கி பிறக்கிறான். குடிகார கணவனால் கைவிடப்பட்ட அபலைப்பெண், தனியே போராடி மகனை வளர்க்கிறாள். அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகன் ராக்கி. தனியொரு பெண்ணாக ராக்கியை வளர்த்து வந்தவள்.
மருத்துவமனையில் மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, துடிதுடித்து ஓடோடி வந்தவளிடம், 'மகன் பிழைப்பது கடினம்' என மருத்துவர் கூறும்போது, அவரையே எதிர்க்கத் துணிந்தவள். ராக்கிக்காக அவள் நடத்திய வறுமைப்போராட்டம் நீண்டது. ''காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது உனக்கே என் உயிரே ஆரத்தி'' என ராக்கி நாத்திகத்தை துணைகொள்ள காரணம், அவன் கடவுளாய் தன் தாயையே மட்டுமே பார்த்து வளர்ந்தது தான். அவளது பேச்சை மட்டுமே அருள் வாக்காய் கொண்டவன்.
'எங்க போனாலும் தனியா போ' என்ற தாயின் வார்த்தை தான், 'கேங்க கூட்டிட்டு வரவன் கேங்க்ஸ்டர்.. ஒத்தையா வரவன் மான்ஸ்டர்' என புகழப்படும் மாஸ் வசனங்களுக்கு காரணமாயிருக்கிறது. ஆகவே தான் கேஜிஎஃப் மாஸ் படம் என்பதைவிட தாயின் சொல்லை காப்பாற்றும் மகனுக்கான பாசப்போராட்டத்துக்கான படம்.
தன் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டபோது, தான் கொண்டு வந்து கொட்டிய சில்லரையைப் பாரத்து, ' 'உங்க அம்மாவ காப்பாத்த இந்த பணம் பத்தாதுப்பா' என சொல்லுவார் அந்த நர்ஸ். எந்த உலகத்தில் பணமில்லாமல் தன் தாய் இறந்தாரோ, அதே உலகத்தில் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என வெறிபிடித்து திரிந்தவன் அவன். 'தங்கம் பத்தாது, இன்னும் தோண்ட சொல்லுங்க' என அவன் கூறியது பேராசையல்ல. அது ஒரு யுகத்துக்கான ஏக்கத்தின் வெறியின் வெளிப்பாடு! தன் தாயின் இறப்பை தடுக்க முடியாமல் போன பணத்தை அடைந்தேயாகவேண்டும் என்ற வேட்கை.
இறந்த பின்பும் கூட, தாயின் நினைவுகளும்,அவளது வார்த்தைகளும் தான் ராக்கியை இயக்கிக் கொண்டேயிருக்கும். இரண்டாவது பாகத்தில் சஞ்சய் தத்தால் குண்டடிப்பட்டு சிகிச்சையில் இருக்கும்போது, 'பயப்படாத.. தூங்கு' என அசரீரியாய் தாயின் குரல் அவனுக்கு தாலாட்டு படிக்கும். ''உனக்கு பின்னாடி 1000 பேர் இருக்காங்குற தைரியம் இருந்தா.. உன்னால ஒரு பொருளத்தான் ஜெயிக்க முடியும். 1000 பேருக்கு முன்னாடி நீ இருக்குற தைரியம் வந்துச்சுன்னா உலகத்தையே ஜெயிக்கலாம்'' என்பதெல்லாம் ராக்கி கேஜிஎஃப்பை கைப்பற்ற உந்துதலாக இருந்த தாயின் ஃபார்முலாக்கள் தான்.
உண்மையில் பணக்காரனாகவும், தங்கச் சுரங்கத்தையே தனதாக்கி கொண்டவனாகவும் பரிணமித்திருக்கும் ராக்கிக்கு சொல்ல முடியாத வெறுமை துரத்திக்கொண்டேயிருக்கும். இறுதிக்காட்சியில் கடலுக்கு அடியில் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கும் தங்கத்தைப்போல அவன் மனதுக்குள் தாயின் இன்மை என்றும் தேங்கியே கிடக்கிறது..
''உயிருள்ள கடவுளை
உன்னிருவில் பார்க்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே..'' என்பது தான் அன்னையர் தினத்துக்கான கேஜிஎஃப் படத்தின் வழி நின்று சொல்லும் வாழ்த்து!
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago