அழிவை நோக்கித் தெலுங்கு சினிமா!

By செய்திப்பிரிவு

“தெலுங்குல எல்லாம் பாருங்க எப்படி இருக்காங்க ஹீரோக்கள் எல்லாம், படம் ஓடலைன்னா காசைக்கூடத் திரும்பக் கொடுத்துடுறாங்க. கணக்கு வழக்கு எல்லாம் சரியா கொடுத்துருவாங்க. அதைவிட முக்கியம் டிக்கெட் விலை. ஹைதராபாத்துல 80 ரூபாய்க்குப் புதுப்படம் பாக்கலாம். அங்க பார்க்கிங் கட்டணம் கிடையாது. நொறுக்குத் தீனியெல்லாம் எம்.ஆர்.பி விலை தான்” இப்படி நாலு பக்கத்துக்கு அக்கட தேச சினிமாவைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் விரைவில் “நம்மூரைப் போல...” புலம்பப் போகிறார்கள். ‘அப்படி என்ன நடக்கப் போகிறது?’ என்பவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரையே.

சில பல வருடங்களுக்கு முன் ‘மகதீரா’ என்கிற படம் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் வளர்ந்து வந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படம். மிகப் பெரிய ஹிட். இங்கே தமிழில் தாணு அவர்கள் டப் செய்து வெளியிடப் போவதால் நேரடித் தெலுங்குப் பதிப்பு தமிழ்நாட்டில் கிடையாது என்று முடிவாகிவிட்டதால், நானும் என் நண்பர்களும் நகரி போய் படம் பார்ப்பது என்று முடிவெடுத்துப் போய் பார்த்தோம். படம் வந்து கிட்டத்தட்ட இருபது நாளுக்கு மேல் ஆகியிருந்த நேரம். அந்த ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தது. அதில் ஒன்று ஏசி. ஏசி தியேட்டரில் ஒரு படம். நாகசைதன்யா படமோ, அவரின் அப்பாவின் படமோ ஓடியது. படத்தின் தலைப்பு மறந்துவிட்டது. அப்படம் தோல்வி. அதே நேரத்தில் இந்த தியேட்டர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. சென்னையிலிருந்து விநியோகஸ்தர்கள் என்று சொல்லித்தான் டிக்கெட்டே கிடைத்தது. பால்கனி டிக்கெட்டுக்காகப் பணம் கொடுத்தபோதுதான் தெரிந்தது ஏன் தெலுங்கு சினிமா வாழ்கிறது, என்று. மூன்று டிக்கெட்டுகளுக்கும் சேர்த்து 60 ரூபாயோ என்னவோதான் வாங்கினார்கள். ஏதாச்சும் டிஸ்கவுண்டா? என்று கேட்டதற்கு “டிக்கெட் ரேட் அந்தே சார். மீ ஊருலாகா லேது’என்று சிரித்தபடி போனார்கள். நம்மூர் கதை தெரிந்த தியேட்டர் மேனேஜர், அன்றைய ப்ளாக் நாட்களில் இதைப் பற்றிக்கூட எழுதியதாய் ஞாபகம்.

அப்போதெல்லாம் தெலுங்கு சினிமாக்கள் டப்பிங்கில் வருமே தவிர பெரிய அளவுக்கு நேரடியாய்த் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது. தெலுங்குப் படம் பார்ப்பதற்காகக் காலையில் திருப்பதிக்கு ரயில் பிடித்துக் காலையில் ஏழுமலையான் தரிசனம். அதுவும் குறிப்பிட்ட சில வார நாட்களில் திருமலை நம்மூர் பெருமாள் கோயில் அளவுக்கு இல்லாவிட்டாலும், கூட்டமில்லாமல் சும்மா நடந்தே பார்த்துவிட்டு வரக்கூடிய அளவில் இருக்கும் அந்த நாளை தெரிந்தெடுத்துப் போவோம். மேலே உட்லாண்ட்ஸ் இருக்கும். நல்ல வெஜ் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு, 12 மணிக்குக் கீழ் திருப்பதி நோக்கி நடக்க ஆரம்பிப்பேன். சரியாய் இரண்டு மணிக்கெல்லாம் கீழ் திருப்பதி வந்து, அங்கே இருக்கும் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, படம் விட்ட விநாடியில் அம்பாய்ப் புறப்பட்டு, 5:30 சதாப்தியைப் பிடித்துச் சென்னைக்கு வந்துவிடுகிற பழக்கம் இருந்தது. சில படங்களின் க்ளைமேக்ஸ் பார்க்காமல் ரயில் பிடித்த காலமும் உண்டு. பெருமாள், சினிமா ரெண்டுத்தையும் தரிசனம் செஞ்ச திருப்தியோட வந்துருவேன். இப்படி திருப்பதி போய் படம் பார்த்துவிட்டு வந்த செலவு என்று கணக்கிட்டால் மொத்தமாய்த் திருப்பதி லட்டோடு நூறு ரூபாய்க்குள் வரும். பல நேரங்களில் ரயிலில் வரும்போது லட்டு காலியாகித் திட்டு வாங்கிய சம்பவங்களும் உண்டு!

சென்னையில் சாதித்த தெலுங்கு படங்கள்

இப்படித் திருப்பதிக்குப் போய்த்தான் நான் தெலுங்கு சினிமாவை பார்த்ததை உடைத்தவர்கள் நம்ம சத்யம் தியேட்டர்காரரகள்தான். அவர்கள்தான் தெலுங்குப் படங்களை அப்போது இருந்த சாந்தம், சுபம் தியேட்டரில் நேரடியாய்த் திரையிட ஆரம்பித்தார்கள். குறிப்பாய் பவன் கல்யாணின் ‘குஷி’ பெரிய ஹிட். சென்னையிலேயே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. அதற்கு முன்னால் ‘சங்கராபரணம்’, ‘மரோசரித்ரா’ போன்ற படங்கள் வருடக் கணக்கில் ஓடியிருக்கிறது என்றாலும் தொடந்து தெலுங்குப் படங்களுக்குச் சென்னை போன்ற பெரு நகரங்களில் ரசிகர்களை உருவானதற்கான காரணம் சத்யம்தான். அவர்களுக்குப் பின்னால்தான் மெல்ல கேசினோ, அயனாவரம் பக்கம் என ஆளாளுக்கு தெலுங்குப் படங்களை வெளியிடத் தொடங்கினார்கள். மெல்ல, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண் என்று அவர்களுக்கான மார்கெட் வளரத் தொடங்கியது.
கேசினோவில் தெலுங்கு படங்கள் வரும்போது ரசிகர் மன்ற போஸ்டர்கள் எல்லாம் வரும். இந்த மாற்றத்துக்கான காரணம் பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள் ஆகியவை அதிகமானதுதான். பக்கத்து மாநில மாணவர்கள் இங்கே வந்து சேரச் சேர தெலுங்கு சினிமா மார்க்கெட் தமிழகம் எங்கும் பிரபலமாக ஆரம்பித்தது. எப்படி இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த பின் தமிழ் சினிமாவுக்கான மார்க்கெட் பெரிதானதோ அப்படி ஒரு மார்கெட் மெல்ல உருவானது.

ஆனால், அப்போதுகூட தெலுங்கு சினிமா கட்டுக் கோப்புடன் நியாயமான ரேட்டுகளில்தான் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தார்கள், அங்கே மக்கள் சினிமாவைக் கொண்டாடுகிறவர்கள். பாலகொல்லு எனும் ஊரில் என் தங்கை திருமணமாகிப் போயிருந்தபோது அவ்வூரில் மொத்தம் ஒன்பது தியேட்டர்கள். அதில் ஆறு தியேட்டர் ரிலீஸ் செண்டர்கள். தெலுங்கு படங்களைப் பார்ப்பதற்காகவே தங்கை பாசத்தைப் பயன்படுத்தி, அங்கே சென்று ஒரு வாரத்தில் ஏழு படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். அங்கேயும் ஒரு சந்தோஷ விஷயம் என்றால் டிக்கெட் விலைதான். என் தங்கை இன்றைக்கும் சொல்வாள் “நீ படம் பார்க்கத்தான் இங்க வர்றே. என் ஊட்டுக்காரர் அப்போ நம்மல இப்ப ஒத்துக்குறாரு” என்பாள்.

பாதை போட்ட பவன் கல்யாண்!

நியாயமாய்ச் சம்பளம் வாங்கி, நியாயமாய் வியாபாரம் செய்து நியாயமாய் மக்களிடம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பவன் கல்யாணின் வெற்றிதான் வியாபாரத்தின் வேறு ஒரு வீரியத்தைக் காட்டியது. ‘குஷி’யின் வெற்றி பவனின் மார்க்கெட்டை ஏற்றிவிட, தொடந்து ‘பத்ரி’ போன்ற படங்களின் வெற்றி சென்னையிலேயே பத்திருபது தியேட்டர்களில் படம் நேரடியாய்த் தெலுங்கு தேச ரிலீஸின் போதே ரிலீஸாக ஆரம்பித்தது. ஏற்கனவே சொன்னது போல பொறியியல் கல்லூரியின் வளர்ச்சியினால் கோவை, திருச்சி எனத் தமிழக முக்கிய நகரங்களில் வெளியாக ஆரம்பித்தது. அந்நாளின் ‘ஜானி’ என்று பவன் கல்யாண் நடித்து, இயக்கி வெளிவந்த படத்தின் வியாபாரம் மிகப் பெரியது. ஆனால், எத்தனை பெரிதாய் வியாபாரம் ஆனதோ அத்தனை பெரிய தோல்வியும்கூட. அப்படத்தினால் பவன் கல்யாணுக்கு கிடைத்த ஒரே நல்ல விஷயம், கூட நடித்த பெண்ணைக் காதல் திருமணம் செய்ததுதான். அதன் பிறகு சுமார் நான்கு வருடங்கள் படமே நடிக்காமல் இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதே பவன் கல்யாண், திருவிக்ரம் ஶ்ரீனிவாச ராவின் ‘ஜல்சா’ வின் ட்ரைலர், பாடல்கள் அதிரிபுதியாய் இருக்க, ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்நேரத்தில் நான் விஜயவாடாவில் ஏதோ ஒரு வியாபாரத்துக்காகப் போயிருந்தேன். அப்போதுதான் இந்த ஸ்பெஷல் ஷோ கலாச்சாரத்தை ஆந்திராவில் பார்த்தேன். கிட்டத்தட்ட விஜயவாடாவில் இருந்த அத்தனை தியேட்டர்களிலும் ‘ஜல்சா’ காலைக்காட்சி ஓடியது. போஸ்டர்கூட இல்லாத தியேட்டர்களில் எல்லாம் படம் ஓட்டினார்கள். முதல் முறையாய் அங்கே ஒரு ஏசி இல்லாத தியேட்டரில் 70 ரூபாய்க்கு தெலுங்கு படம் பார்த்தேன். அப்படம் ரெண்டும் கெட்டானாய் இருந்தாலும் ஓப்பனிங் ஷோ, மொத்த வசூல் என பவனின் மார்க்கெட்டை எகிற வைக்க, மெல்ல அடுத்த நிலை ஹீரோக்கள் தங்களின் படங்களுக்குக் காலைக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அந்தக் கலாச்சாரம் மெல்ல பரவி சென்னைக்கு வர ஆரம்பித்தது தனிக் கதை.

விஸ்வரூபத்துக்கு தடை

‘விஸ்வரூபம்’ படம் வெளியாகி, தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்த நேரம். எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நண்பர்களுடன் பெங்களூரில் டிக்கெட் புக் செய்து அதிகாலையில் கிளம்ப, போகிற வழியில் பெங்களூரிலும் தடை என்று சொல்லிவிட, வழியில் சூலூர் பேட்டையில் ஒரு தியேட்டரில் ஓடுவதாய்த் தெரிந்து அங்கே காலைக் காட்சி பார்ப்போம் என்று போனால் பாதிப் படத்தில் படத்தை ஆஃப் செய்து எல்லோரையும் வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பலில் சூலூர்பேட்டையில் படம் பார்க்க லாட்ஜில் ரூமெல்லாம் புக் செய்து வந்திருந்த தமிழர்கள் ஏராளம். வேறு வழியில்லாமல் காளஹத்தி கோயிலுக்குப் போய் கமல் ஹாசனுக்கும் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வெளியே வந்தால் பக்கத்து ஊரில் தெலுங்கு வர்ஷன் ஓடுகிறது என்றார்கள். ‘சீதம்மா வகுட்லோ சிறுமல்லிப் பூ’ வெளிவந்து பரபரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரில் பாதிப் படம் ஓடியிருக்க, கமலின் ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சியை மட்டும் பார்த்துவிட்டு, அடுத்த ஷோவுக்கு டிக்கெட் வாங்கினோம். அப்போது தியேட்டர் ஓனர் நிறைய தமிழ் ரசிகர்கள் வந்திருப்பதை அறிந்து ப்ளாட் ரேட்டாய் 50 ரூபாய் என்று சொல்ல, உள்ளூர் தெலுங்கு ரசிகர்களுக்கும் அதே ரேட் சொல்ல, பெரும் தகராறு செய்தார்கள் தெலுங்கு ரசிகர்கள். பிறகு வேறு வழியில்லாமல் அனைவருக்கும் 25ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்கள்.

பான் இந்தியா பகல் கொள்ளை!

ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஹைதராபாத் போயிருந்தபோது ‘நோட்டா’ வெளியானது. முதல் நாள் மாலைக் காட்சிக்கு அதிகபட்ச டிக்கெட் விலையாய் பால்கனிக்கு 60 ரூபாய் கொடுத்துத்தான் படம் பார்த்தோம். தியேட்டரினுள் சல்லிசான விலையில் சமோசா எல்லாம் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதே வாரத்தில் அங்கே வெளியான ‘நாடகம்’ என்கிற சின்ன பட்ஜெட் படத்துக்குச் சுமார் ஆயிரம் சீட் கெப்பாசிட்டி உள்ள விஸ்வநாத் என்கிற தியேட்டரில் இரவுக்காட்சி போன போது உயர் ரக டிக்கெட் விலை 80 ரூபாய்க்கு நாங்கள் மட்டுமே போயிருந்தோம். முன் வரிசை டிக்கெட்டுகளான 30 ரூபாய் டிக்கெட் ஹவுஸ் ஃபுல். இங்கே நாம் முன்வரிசை டிக்கெட்டுகளையே கொடுப்பதில்லை. அப்படி இருந்த நிலையில் ‘பாகுபலி 2’வந்து அகில உலக மார்கெட், பேன் இண்டியா படம் என்று தெலுங்கு சினிமாவை ஏற்றி விட, எந்த ராஜமெளலி படத்தை 18 ரூபாய்க்கு பார்த்தோமோ அதே ராஜமெளலி படத்தை நூற்றுக் கணக்கில் பணம் கொடுத்துப் பார்க்க, அந்த வெற்றி கொடுத்த தைரியம், தெலுங்குப் படங்கள் எல்லாம் இன்னும் இன்னும் என்று பட்ஜெட் பார்க்காமல் களத்தில் இறங்க ஆரம்பித்தன.

தற்போது நெல்லூருக்கு முன்னால் ஒரு சி செண்டர் கிராமத்தில் முன் வரிசை சீட்டுக்கு அதுவும் ஏசியில்லாத, அரங்கிற்கு 150 ரூபாய்கொடுத்தால்தான் படம்பார்க்க முடியும் என்பது எத்தனை பெரிய துரதிஷ்டம்! ஊரில் நிறையப் பேரிடம் கேட்டேன். கேட்ட வரையில் இளைஞர்களைத் தவிர பெரும்பாலும் யாரும் படம் பார்க்காமல்தான் இருக்கிறார்கள். இந்த டிக்கெட் விலையேற்றம் தெலுங்கு சினிமாவை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. டிக்கெட் விலையேற்றத்தால் சாமானிய ரசிகர்கள், நடுத்தர மக்கள் என எல்லோருக்கும் கோபமிருக்கிறது. அரசு எத்தனை தீவிரமாய்ச் சட்டமியற்றினாலும் அதை கண்காணிக்க, செயல்படுத்த முடியாதபோது இப்படித்தான் நடக்கும். ‘ஆர்.ஆர்.ஆரி’ன் வருமானத்தில் மூணு நாட்களில் 550 கோடி ரூபாய் என்று எல்லாம் சொன்னாலும் குறைந்த பட்சம் 1,500 கோடி ரூபாய் வசூலைக் கடந்தால்தான் நல்ல வியாபாரம். இந்தி மார்க்கெட்டில்தான் ‘பாகுபலி 2’பெரும் புரட்சி செய்தது. ஆனால் அதே புரட்சியை இப்படத்தில் எதிர்பார்க்க முடியாது. முக்கி முக்கி நான்கைந்து நாட்களில் 100 கோடியை டச் செய்திருக்கிறது. இதன் நடுவில் டப்பிங் படமான புஷ்பா கல்லா கட்டியது வேறு பல இயக்குநர்கள் நடிகர்களுக்கு பேன் இந்தியா படங்களின் மீதான ஆர்வம் அதிகமாகிக் கொண்டிருக்க, இன்னொருபுறம்,ஏற்கனவே 150 கோடி ரூபாய்ப் படத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நம் தமிழ் ஹீரோக்கள் தெலுங்குப் பக்கத்தில் கால் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

எது எப்படி நடந்தாலும் நிஜ வசூலைத் தெரிந்து கொள்ளவே முடியாத தமிழ்நாடு போல இல்லை என்றாலும் இவர்களின் பேன் இந்தியா வெறி தெலுங்கு மக்களை சினிமாவிடமிருந்து விலக்கிவிடும் என்றே தோன்றுகிறது.

- கேபிள் சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர், விமர்சகர், திரைப்பட இயக்குநர்
தொடர்புக்கு: sankara4@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்