நானாக இருப்பதையே விரும்புகிறேன்: சாய் பல்லவி சிறப்புப் பேட்டி

By அனுசுயா மேன்ன்

"மலர் சிரிக்கும்போதெல்லாம் நாம் மயங்குகிறோம்; அஞ்சலி அழுதால், நமக்கும் அழுகை வரும் போலிருக்கிறது."

மலையாளத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களைக் கொள்ளை கொண்ட படம் 'பிரேமம்'. பிரேமத்தைக் கண்டவர்கள் மலரை அறியாமல் இருக்க மாட்டார்கள். மலராக நம்மை மகிழ்வித்த சாய் பல்லவி, இப்போது 'கலி' படத்தில் துல்கர் சல்மானின் மனைவியாக, அஞ்சலி எனும் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜார்ஜியாவில் கடைசி வருடம் மருத்துவம் படிக்கும் சாய் பல்லவி, தன் விருப்பங்கள், படங்கள், எதிர்காலம் குறித்து நம்மிடம் தொலைபேசினார்.

பிரேமத்தில் வரும் டப்பாங்குத்து பாட்டு நிஜமாகவே செம கூல்....

(சிரிக்கிறார்). படப்பிடிப்பின்போது எதுவும் எனக்குத் தெரியவில்லை. நான் சிறந்த டான்சர் என்று கூறவில்லை. சொல்லப்போனால் அந்த ஸ்டைல் எனக்கு வசதியாக இருக்கவில்லை. அது இயக்குநர் அல்போன்ஸ் செய்த மாயம். அவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம். எப்பொழுதுமே நடனத்தோடு சேர்ந்த விஷயங்களைச் செய்யவே ஆசைப்பட்டிருக்கிறேன்.

(விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியான, 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வின் பிரபல போட்டியாளர்களில் ஒருவர் சாய் பல்லவி)

உங்களுக்கென்று எந்த சினிமா பின்புலமும் இல்லை. ஆனாலும் திரையில் உங்களின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. எப்படி இது சாத்தியமானது?

எனக்குத் தெரியவில்லை. எப்படி நடிக்க வேண்டும் என்றுகூட எனக்குத் தெரியாது. நிஜ வாழ்க்கையில் மலரும் அஞ்சலியும் எப்படி இருப்பார்களோ, அதைத்தான் திரையில் பிரதிபலித்தேன். மலர் பாத்திரம் இரக்கமுள்ள ஓர் ஆசிரியை. அஞ்சலி, கணவனுக்கு உறுதுணையான மனைவி பாத்திரம். நிஜத்தில் இருந்திருந்தால் எப்படி வாழ்ந்திருப்பேனோ அதைத்தான் கதாபாத்திரமாக செய்தேன். பிரேமத்துக்குப் பிறகு வந்த சில கதாபாத்திரங்களில் என்னைப் பார்க்க முடியாததால் அவற்றில் நடிக்க மறுத்திருக்கிறேன்.

ஒரு நடிகையாக பிரேமத்துக்கும் கலிக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

'பிரேமம்' முழுக்க நான் விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தேன். 'கலி' படத்தை 35 நாட்களுக்குள் முடிக்க வேண்டியிருந்தது. படிப்புக்காக ஜார்ஜியா போக வேண்டியிருந்ததால், அதற்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மொத்த படக்குழுவும் இருந்தது. சில சமயங்களில் காலை 9 மணிக்குத் தொடங்கும் படப்பிடிப்பு, அதிகாலை 3 மணி வரை நீளும், அப்போதெல்லாம் அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் மொத்த குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தது, குறிப்பாக துல்கர் சல்மான்.

'கலி' படத்துக்காக சொந்தக்குரலில் பேசி இருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

என்னால் மலையாளத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பேசுவது என்பது முற்றிலும் வேறு அனுபவம் அல்லவா? சில வசனங்களுக்கு நிறைய முறை ரீடேக் போக வேண்டியிருந்தது. ஆனாலும் எப்படியோ சமாளித்துவிட்டேன்.

வேறு ஏதேனும் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறீர்களா?

பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதலில் என் படிப்பை முடிக்க வேண்டும்.

'கலி' படம் முழுக்க, ஒப்பனை இல்லாமலே வருகிறீர்களே?

படத்தின் இயக்குநர் சமீர் உங்களுக்கு மேக்கப் வேண்டுமா என்று கேட்டார். ஒப்பனை போட்டுப் பார்த்த பிறகு, முன்னால் இருந்த முகமே நன்றாக இருந்தது. சொன்னவுடன் சமீரும் அதை ஏற்றுக்கொண்டார்.

முதலில் என்னுடைய குறைபாடுகள் மேல் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதற்கு, அல்போன்ஸுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் 'பிரேமம்' படத்தில் மலர் காதாபாத்திரம் இயல்பாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார். மற்ற எல்லாப் பெண்களையும் போல நானும் ஆரம்பத்தில் பருக்களை வெறுத்திருக்கிறேன். ஆனால் அதை மாற்றாமல் அப்படியே நடித்ததுதான் என்மீதான நம்பிக்கையை எனக்கே ஏற்படுத்தியது. இது சின்னச்சின்ன குறைகளைக் கொண்ட இளம்பெண்கள் பலருக்கும் ஊக்கமூட்டுவதாக அமையும்.

என் வாழ்க்கையில் இதுவரை நான் மேக்கப் போட்டதில்லை. அதில் ஆர்வமும் இல்லை. நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அதைத்தான் விரும்புகிறேன். நான் பயன்படுத்துவது சன் ஸ்க்ரீனும், கண் மையும்தான். ஆனால் சமீபத்திய பத்திரிக்கை ஒன்றின் போட்டோஷூட்டுக்காக ஒப்பனை செய்ய வேண்டியிருந்தது. அடுத்து வரும் படங்களில் இயக்குநர் சொன்னால், ஒப்பனைக்கு நிச்சயம் மறுப்பு சொல்லமாட்டேன். ஆனால் ஒரு விஷயம். அழகுக்கு இவையெல்லாம் முக்கியமில்லை. நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் அழகே இருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த மற்ற விஷயங்கள்?

பயணம் செய்வது எனக்குப் பிடிக்கும். அம்மாவுடன் பயணிப்பது, நடனமாடுவது பிடிக்கும். படங்கள் பார்ப்பேன். நான் நானாகவே இருப்பது பிடிக்கும்.

உங்களின் எதிர்காலம் சினிமாவில்தானா?

அதைப்பற்றி இன்னும் யோசிக்கவில்லை. திறமைசாலிகள் தினசரி வந்துபோகும் இடம் சினிமா என்பது எனக்குத் தெரியும். பார்க்கலாம், முதலில் நான் ஒரு மருத்துவர் ஆகிறேனே!

தமிழில்: ரமணி பிரபா தேவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE