'நான் என்ன சொன்னாலும் சர்ச்சையாக மாறுகிறது' - மெக ஸ்டார் சிரஞ்சீவி வேதனை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ''நான் என்ன பேசினாலும் சர்ச்சையாக மாறிவிடுகிறது" என்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வேதனை தெரிவித்துள்ளார். ஆந்திர அரசின் தியேட்டர் டிக்கெட் விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு இப்படி பதில் கொடுத்துள்ளார் சிரஞ்சீவி.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு நேற்று புதிய திருத்தப்பட்ட தியேட்டர் டிக்கெட் விலை அரசாணையை வெளியிட்டது. இதையடுத்து தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்து இருந்தார். இதனிடையே, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனது மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது, ஊடகங்கள் அவரிடம் தியேட்டர் கட்டண விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "எந்தக் கேள்விக்கும் இப்போது பதிலளிக்க மாட்டேன். நான் என்ன பேசினாலும் சர்ச்சையாக மாறிவிடுகிறது. அப்படி சர்ச்சையானால் மகளிர் தினத்தின் புனிதமான தருணத்தை நீர்த்துப்போகச் செய்யலாம். நாளை ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து பின்னர் இதுதொடர்பாக பேசுகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

முன்னதாக, டிக்கெட் விலை உயர்வு தொடர்பாக தெலுங்கு திரையுலகில் முதல் ஆளாக குரல் கொடுத்ததோடு, அதற்காக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தது, தனிக் குழு ஒன்றை ஏற்படுத்தியது என அனைத்தையும் மெக ஸ்டார் சிரஞ்சீவி முன்னின்று செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE