வாழ்க்கையின் மூன்று படிநிலைகளை சொல்லும் ‘ஆட்டோகிராஃப்’, ‘பிரேமம்’, ‘அட்டக்கத்தி’ பாணி கதை. எனினும் அதனை வினீத் ஸ்ரீனிவாசன் தனக்கே உரிய எமோஷனல் டச்சுடன் அழகான ஒரு படத்தை கொடுத்துள்ளார். அதுதான் ஹ்ரிதயம்.
+2 முடித்துவிட்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் அருண் நீலகண்டன் (ப்ரணவ் மோகன்லால்). கல்லூரில் சேர்ந்த சில நாட்களிலேயே தர்ஷனா (தர்ஷனா ராஜேந்திரன்) என்ற பெண்ணிடம் காதலில் விழுகிறார். சீனியர்களுடனான மோதல், புதிய நண்பர்கள், காதல் என போய்க் கொண்டிருந்த அவரது வாழ்க்கை எதிர்பாராத சூழலில் ஏற்படும் திடீர் காதல் முறிவால் மாறுகிறது. விரக்தியின் உச்சிக்கு செல்லும் ப்ரணவின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறத் தொடங்குகின்றன. ஜூனியர்களை ராகிங் செய்கிறார், தர்ஷனாவை வெறுப்பேற்ற வேண்டாவெறுப்பாக வேறொரு பெண்ணை காதலிக்கிறார், குடிக்கிறார். இப்படியாக செல்லும் ப்ரணவின் வாழ்க்கை செல்வா என்ற சக மாணவனால் புத்துயிர் பெறுகிறது. இதன் பின்னர் அவரது வாழ்க்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதே ‘ஹ்ரிதயம்’ படத்தின் கதை.
நாயகனாக ப்ரணவ் மோகன்லால். முதல்முறையாக நடிப்புக்குத் தீனி போடும் ஒரு கதாபாத்திரம். படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் பார்வையாளர்கள் மனதில் இடம்பிடிக்கிறார். ப்ரணவ்வின் முதல் காதலியாக நடித்திருக்கும் தர்ஷனா ராஜேந்திரனின் நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. காதலனோடு ப்ரேக் அப் ஆகும்போது கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும், இறுதியில் அதே காதலனின் திருமணத்தின் போது அழுகையை அடக்கி அங்கிருந்து வெளியேறுவதாகட்டும் கண்களாலயே பேசுகிறார்.
இவர்கள் தவிர கல்யாணி ப்ரியதர்ஷன், ப்ரணவ்வின் நண்பராக வரும் அஷ்வத் லால், அஜு வர்கீஸ், காளேஷ் ராமானந்த் என அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
படத்தின் தொடக்கத்தில் ஒரு வசனம் உண்டு. ரயிலில் ஒரு கதாபாத்திரம் சென்னைக்கு செல்லும் ப்ரணவ் மோகன்லாலிடம் ‘4 ஆண்டுகள் முடிந்து சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பி வரும்போது இதயத்தைப் பிழியும் ஒரு வலி ஏற்படும்’ என்று சொல்லும். சரியாக இடைவேளையின் போது ப்ரணவ் மோகன்லால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ரயிலேறி செல்வார். அந்த கதாபாத்திரம் சொன்ன இதயத்தைப் பிழியும் அந்த வலியை பார்வையாளர்களால் உணர முடியும்.
வழக்கமாக வினீத் ஸ்ரீனிவாசன் படங்களில் சென்னை ஒரு பகுதியாக இடம்பெறுவது வழக்கம். அது இப்படத்தில் ஒரு படி மேலாக சென்று சென்னை ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது. அந்த அளவுக்கு சென்னையையும் அதன் மனிதர்களையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் வினீத் ஸ்ரீனிவாசன்.
வாழ்க்கையின் மூன்று படிநிலைகளை காட்டும்போது கதாபாத்திரங்களில் பெரியளவும் மாற்றங்கள் இல்லையெனினும் அவர்கள் காட்டும் முதிர்ச்சி வியக்கவைக்கிறது. உதாரணமாக தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வரும் ப்ரணவ் - தர்ஷனா காதல் அவர்கள் இருவரது இருண்ட பக்கங்களையும் வெளிக்கொண்டு வருவதை காட்சிப்படுத்திய விதம் அருமை. பெரிய ட்விஸ்ட்கள், திருப்பங்களோ எதுவும் இல்லாமல் ஒரு சுவாரஸ்யமான ஃபீல் குட் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் குறைகள் எப்போதும் விறைப்பாக, சீனியர்களை ராகிங் செய்துகொண்டும், குடித்துக் கொண்டும் இருக்கும் ப்ரணவ் திடீரென ஒரு நாள் தன் ரூம்மேட்களிடம் சண்டை போட்டு விட்டு மறுநாள் முதல் நன்கு படிக்கும் மாணவனாக மாறுகிறார். இந்த திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. மற்றொன்று படத்தின் நீளம். இரண்டாம் பாதியில் வரும் சில நீளமான காட்சிகளை பாரபட்சம் பார்க்காமல் வெட்டியிருந்தால் ஆங்காங்கே தோன்றும் சலிப்பை தவிர்த்திருக்கலாம். செல்வா கதாபாத்திரம் ப்ரணவ் வாழ்க்கையில் வந்தவுடனே இன்னும் சில காட்சிகளில் அது என்னவாகப் போகிறது என்று நமக்குத் தெரிந்துவிடுவதால் அந்த காட்சி நமக்குள் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை.
நீங்கள் ஃபீல் குட் படங்களின் ரசிகர்களாக இருந்தால், உங்கள் கல்லூரி வாழ்க்கையின் நாட்களை திரும்பிப் பார்க்க நினைத்தால் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘ஹ்ரிதயம்’.
இப்படம் இப்போது ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago