இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா தொற்று 

By செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் மீனா, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும். அனைவரும் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி, தடுப்பூசி போடுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்''.

இவ்வாறு தமன் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமன், நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மூவரும் அடுத்த படம் குறித்து சந்தித்துப் பேசியிருந்தனர். நேற்று (ஜன. 6) மகேஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று தமனும் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE