துல்கர், பார்வதிக்கு கேரள அரசின் விருது; பிரேமம் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை!

கேரள மாநில அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.

சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலமான படம் என்ற விருதையும் நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. சிறந்த இசை (ரமேஷ் நாராயண்), சிறந்த பாடல் வரிகள் (ரஃபீக் அகமது), சிறந்த ஒலி வடிவம் (ரங்கநாத் ரவி) ஆகிய பிரிவுகளிலும் என்னு நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனின் மகள் மதுஸ்ரீ நாராயணன் சிறந்த பாடகி விருதை பெற்றுள்ளார்.

சிறந்த நடிகர், இயக்குநர் விருதுகளைத் தாண்டி, சிறந்த திரைக்கதை (உன்னி, மார்டின்), சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லி வென்றுள்ளது.

இந்த விருதுப் பட்டியலில், சென்ற வருடம் கேரள திரை உலகில் பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சூடாக விவாதித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE