புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் கண் கலங்கியபடியே பேசினார் சிவகார்த்திகேயன்.
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அன்றைய தினம் வெளியூரில் இருந்ததால், நேற்று (நவம்பர் 1) பெங்களூருவில் புனித் ராஜ்குமார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார் சிவகார்த்திகேயன். அதற்கு முன்னதாக சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
"ஒரு மேடையில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி செய்ததைப் பார்த்து பாராட்டினார் புனித் ராஜ்குமார் சார். அது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு புனித் சாருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நீண்ட பேச்சில் "உங்களை ரொம்பப் பிடிக்கும். பெங்களூருக்கு வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்" என்று பலமுறை சொன்னார். ஆனால், இப்படியொரு தருணம் வாய்க்குமென்று யோசிக்கவே இல்லை.
சிவராஜ்குமார் சாருடன் ஒரு பாட்டில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளேன். அவரைச் சந்திக்கும்போது கூட, "என்னைச் சந்திக்க வேண்டும் என்று புனித் ராஜ்குமார் சார் வரச் சொன்னார். சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இப்படி நினைக்கவே இல்லை" என்றேன். இப்போது வரை அதிர்ச்சியில்தான் இருக்கிறேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. இதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை.
அவருடைய பாடல்கள், சண்டைக் காட்சிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. இப்போது தோன்றுவது எல்லாம் திரையில் மட்டும் ஹீரோவாக இருந்துவிட்டுப் போய்விடக் கூடாது. நிஜ வாழ்க்கையில் புனித் சார் மாதிரி நிறைய நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். அவருடைய தூய உள்ளத்துக்காகவே எப்போதுமே நினைவு கூரப்படுவார் புனித் ராஜ்குமார் சார். இது ஒரு திரையுலகிற்கான இழப்பு மட்டுமல்ல, இந்தியத் திரையுலகத்துக்கே ஏற்பட்ட இழப்பு. எங்களுக்கு எல்லாம் இவருடைய செயல்கள் உத்வேகம்தான். ஒரு நாயகனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் புனித் சார்.
புனித் சாருடைய வீட்டிற்குச் சென்று, அவருடைய மனைவியைச் சந்தித்தேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. இதே போன்றதொரு சூழலில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்தேன். எங்க அப்பா தவறிவிட்டார். அப்போது எங்க அம்மாவை எப்படிப் பார்த்தேனோ, அப்படித்தான் இன்று புனித் சாருடைய மனைவியைப் பார்த்தேன். புனித் சார் இப்போது கடவுளாக இருந்து, அனைவரையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
'டாக்டர்' படம் பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனிடம் பேசியுள்ளார் புனித் சார். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இப்போது புனித் சாருடைய மனைவி கூட 'டாக்டர்' படம் குறித்து சார் சொன்னதைத்தான் சொன்னார்கள். அதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. அதை நினைத்து சந்தோஷப்படுவதா, என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த 'டாக்டர்' படம் புனித் சாரை அவ்வளவு சிரிக்க வைத்தது என்று சொன்னார்கள். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகத் தான் இதைப் பார்க்கிறேன். மிஸ் யூ சார்".
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago