வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த இருவர் காதலித்தால், அதற்கு எதிர்ப்பு வந்தால், அந்த எதிர்ப்பைத் தாண்டி காதலர்கள் இணைய முடிவெடுத்தால், அப்போதும் பிரச்சினை வேறு வடிவில் முளைத்தால் அதுவே 'லவ் ஸ்டோரி'.
ரேவந்த் (நாக சைதன்யா) அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறார். வறுமையை வென்றெடுக்க வேண்டிய சூழல். நாம் கையேந்தும் நிலை மாறி, எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு வளர வேண்டும் என்று அம்மா ஈஸ்வரிராவ் மகனுக்கு அறிவுறுத்துகிறார். கிராமத்திலிருந்து ஹைதராபாத்துக்குச் சென்று ஃபிட்னஸ் சென்டர் ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார் நாக சைதன்யா. அங்கு பயிற்சி பெற வரும் பெண்ணின் தோழியாக மௌனி (சாய் பல்லவி) வருகிறார். அவர் வேலை தேடி தோழியின் வீட்டில் தங்குகிறார். இந்நிலையில் நாக சைதன்யாவுக்கும், சாய் பல்லவிக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. நண்பர்கள் ஆகிறார்கள். சினிமாவின் எழுதப்பட்ட விதிப்படி காதலாகிக் கசிந்துருகி, சாதிப் பிரச்சினையால் கண்ணீர் மல்கி நிற்கிறார்கள். ஒரு முடிவைத் தீர்க்கமாக எடுக்கிறார்கள். ஆனால், வேறு ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் நேரிடுகிறது.
அந்தச் சூழல் நேரிடக் காரணம் என்ன, சாதியைத் தாண்டி இணைந்தார்களா, அவர்கள் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, கொஞ்சம் வசதியுடன் வாழும் சாய் பல்லவி ஏன் வேலை தேடி நகரத்துக்கு வருகிறார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
நாக சைதன்யாவை ரேவந்த் என்ற கதாபாத்திரமாக மட்டுமே பார்க்க முடிவது பெரிய பிளஸ். ஒரு சிறிய கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியைச் சரியாகக் கண்முன் நிறுத்துகிறார். கிராமத்து இளைஞனின் அப்பழுக்கில்லாத உள்ளத்தையும் அப்படியே வெளிப்படுத்தி மனதில் ஒட்டிக்கொள்கிறார். டான்ஸில் அசத்தி, தன் ஃபிட்னஸ் சென்டரைப் பெரிய அளவுக்குக் கொண்டுபோக நினைப்பது, சாய் பல்லவியை பார்ட்னராக்குவது, அவருடனான மோதல்- ஊடல்- காதல் என அனைத்திலும் இயல்பாய் நடித்துள்ளார். நாயகனுக்கான சாகசக் காட்சிகள் துளியும் இல்லாத படத்தில், யதார்த்த நாயகனாய் வலம் வரும் விதம் அட போட வைக்கிறது.
சாய் பல்லவிதான் படத்தின் மிகப்பெரிய தூண். இயலாமை, ஏமாற்றம், பயம், தவிப்பு, கோபம், அழுகை என கலந்துகட்டி நடித்து ஸ்கோர் செய்கிறார். படத்தின் டான்ஸ் காட்சிகளில் வளைந்து நெளிந்து ஆச்சர்யப்படவைக்கிறார். அவரின் கண்கள் நிறையவே பேசுகின்றன. ஒட்டுமொத்த ஃபெர்பாமன்ஸில் வசீகரிக்கிறார். நாக சைதன்யாவுடன் நடனம் ஆடும்போது அவரை ஈஸியாக ஓவர் டேக் செய்து பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.
ராஜீவ் கனகலா எதிர்மறைக் கதாபாத்திரத்துக்கான சரியான வார்ப்பு. எரிச்சல் வரவழைக்கும் அளவுக்கு கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். சாய் பல்லவியின் தாயாக தேவயானி ஒரே காட்சியில் அழுத்தமாகத் தடம் பதித்து நிற்கிறார். மகனை அதட்டி, அரவணைத்து, அறிவுறுத்தும் தடாலடி தாயாக ஈஸ்வரி ராவ் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். 'காலா' படத்தில் ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இதில் நடித்துள்ளார்.
விஜய் சி.குமார் கிராமத்தின் அழகை, ஹைதராபாத் நகரத்தை பிரேமுக்குள் சிறைபிடித்துள்ளார். பவனின் இசையும், பின்னணியும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. மார்த்தாண்ட், வெங்கடேஷின் எடிட்டிங் மட்டும் கொஞ்சம் நிதான கதியில் படம் செல்வதுபோன்ற உணர்வை அளிக்கிறது.
இயக்குநர் சேகர் கம்முலாவைப் பாராட்டியே ஆகவேண்டும். ரத்தம், வன்முறை, சண்டைக் காட்சிகள் என்று வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் என்று எதுவும் படத்தில் இல்லை. நாயக அம்சத்தைத் தூக்கிப் பிடிக்கவும் இல்லை. சாதியப் பிரச்சினையையும் தனி மெசேஜ் என்று சொல்லாமல் போகிற போக்கில் பதிய வைக்கிறார். அதிலும் அழுத்தத்தைத் தவறவிடவில்லை. செயற்கையான முடிவு என்றும் கட்டமைக்கவில்லை. காதலர்களின் உணர்வுகளைச் சரியாகக் கையாண்ட விதம் ஆஸம். திருப்பங்களில் நம்பிக்கையில்லாமல் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் இயல்பான முடிவையே கொடுத்துள்ளார். அதுதான் படத்துக்கு ஆதார பலம் என்று சொல்லலாம்.
ஆனால், படத்தின் திரைக்கதை கொஞ்சம் இழுவையாய் நீள்வதுதான் நெருடல். நாக சைதன்யாவின் பக்கத்து வீட்டுப் பாட்டி எப்படி சாய் பல்லவி வீட்டுத் திருமண நிகழ்வில் பாட்டு பாடுகிறார், ராஜீவ் கனகலா குறித்து நாக சைதன்யாவிடம் சொல்வதற்கு முன்பே ஒரு வாய்ப்பு ஏற்பட்டபோதும் சாய் பல்லவி ஏன் சொல்லாமல் தவிர்க்கிறார் போன்ற சில கேள்விகள் மட்டுமே எழுகின்றன. ராஜீவ் கனகலாவை எதிர்கொள்ளும் நாக சைதன்யா காட்சியில் கிராபிக்ஸ் சரியில்லை. சில காட்சிகளை கிரீன் மேட்டில் எடுத்தது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால், இவையெல்லாம் பொறுத்துக்கொள்ளக் கூடிய, சிறிய குறைகளே.
இவற்றைத் தவிர்த்து சினிமாவுக்கான எந்த செயற்கைத்தனங்களையும் எட்டிப்பார்க்க விடாமல், சமரசம் செய்து கொள்ளாமல் காதலின் நேர்த்தியை, ஆழத்தை, உறவுப் பிணைப்பை மெதுமெதுவாக நமக்குள் கடத்திய விதத்திலும், ஃபீல் குட் மூவி என்று சொல்லும் அளவுக்கு நல்ல காதல் திரைப்படத்தைக் கொடுத்த விதத்திலும் 'லவ் ஸ்டோரி' முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago