மக்களை ஏமாற்றவே அதிக வசூல் என்று விளம்பரம் செய்கிறோம்: தெலுங்கு தயாரிப்பாளரின் சர்ச்சைப் பேச்சு

ஆந்திரப் பிரதேச அமைச்சரைச் சந்தித்தபோது தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சி.கல்யாண் பேசிய பேச்சு இணையத்தில் கசிந்து அதனால் சர்ச்சை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆந்திர அமைச்சர் பேர்னி நானியுடன், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சிலர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் தில் ராஜு, டிவிவி தானய்யா உள்ளிட்ட பல முக்கியத் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சிகே எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சி.கல்யாணும் கலந்துகொண்டார். இவர் 'ரூலர்', 'ஜெய் சிம்ஹா' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர்.

இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை, அதற்குரிய வரி உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு வரி வருவாய்க்கும், திரைப்படங்களின் வசூலுக்கும் தொடர்பிருப்பதில்லை என்பது குறித்து அமைச்சர் இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தயாரிப்பாளர் கல்யாண், "போஸ்டர்களில் ரூ.200 கோடி, ரூ.500 கோடி வசூல் என்று போடுவதெல்லாம் மக்களை ஏமாற்றவே. ஹிட் ஆகியிருக்கும் ஒரு திரைப்படத்தை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இதைச் செய்கிறோம். இதனால் பலன் கிடைத்திருக்கிறது. இங்கு தவறுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லாம் தவறாக நடக்கவில்லை. மேலும் 'ஜாதி ரத்னாலு' போன்ற சில படங்கள் உண்மையிலேயே நல்ல வசூலைப் பெறுகின்றன" என்று பேசியுள்ளார்.

சி.கல்யாண் பேசிய காணொலி, யாருக்கும் தெரியாமல் எடுக்கப்பட்டு, இணையத்தில் கசிந்து தற்போது பல தெலுங்கு ஊடகங்களால் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்தக் காணொலியைப் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதனால் பெரிய சர்ச்சை ஏற்படலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE