9 ஆண்டுகளில் 9 அறுவை சிகிச்சை: புற்றுநோயுடன் போராடிய மலையாள நடிகை காலமானார் 

By செய்திப்பிரிவு

புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் மலையாள நடிகை சரண்யா சசி காலமானார். அவருக்கு வயது 35.

மந்த்ரகொடி, சீதா உள்ளிட்ட மலையாளச் சின்னத்திரை தொடர்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சரண்யா சசி. சோட்டா மும்பை, தலப்பாவு உள்ளிட்ட திரைப்படங்களிலும் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அன்று முதல் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார் சரண்யா. இந்த 9 ஆண்டுகளில், மூளையிலிருக்கும் கட்டியை நீக்க இதுவரை 9 முறை அறுவை சிகிச்சைக்கு ஆளாகியிருக்கிறார். மேலும் 2 முறை இவரது தைராய்ட் கட்டியை நீக்க அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.

கடைசியாக ஏப்ரல் 2021ல் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதன் பிறகு இவருக்குக் கோவிட் -19 தொற்று ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிமோனியா காய்ச்சலும் ஏற்பட தீவிரமான சிகிச்சையில் இருந்தார் சரண்யா. ஜூன் மாதம் கோவிட் தொற்றிலிருந்து மீண்டாலும் ஏற்கனவே அவரது உடலில் பலப் பிரச்சினைகள் இருந்ததால் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை. செயற்கை சுவாச உதவிக்கான கருவியும் பொருத்தப்பட்டது.

சிகிச்சைக்கு சரியாகப் பணம் இன்றித் தவித்த சரண்யாவுக்கு சக நடிகை சீமா நாயர் என்பவர் உதவி வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 9, திங்கட்கிழமை, சரண்யா சசி சிகிச்சை பலனின்றி காலமானதாக சீமா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சரண்யாவின் உயிர் பிரிந்தது.

சரண்யாவின் மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE