சீனாவில் 6,000 தியேட்டர்களில் பாகுபலி ரிலீஸ்: பி.கே சாதனை முறியடிப்பு

சீனாவில் அமீர்கானின் 'பி.கே' படத்தின் சாதனையை ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் முறியடித்திருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிடோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ’பாகுபலி’. வெளியான அனைத்து மொழிகளிலும், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான ’பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிவருகிறது.

'பாகுபலி' திரைப்படம் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. சீனா வெளியீட்டு உரிமையை இ-ஸ்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

தற்போது, மே மாதம் சீனாவில் சுமார் 6000 திரையரங்குகள் 'பாகுபலி' படத்தை வெளியிட இ-ஸ்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் அமீர்கான் நடித்த 'பி.கே' திரைப்படம் சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டதே சாதனையாக இருந்தது. 'பி.கே' படத்தின் சாதனையை 'பாகுபலி' திரைப்படம் முறியடித்திருக்கிறது.

'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் 2017ம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என இயக்குநர் ராஜமெளலி ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE