கேரளாவில் தொடர்ந்து திரையரங்குகள் மூடல்: ஃபஹத் ஃபாசிலின் அடுத்த படமும் ஓடிடி வெளியீடு?

By செய்திப்பிரிவு

கேரளாவில் ஊரடங்கு தொடர்வதால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி வெளியீடை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மாலிக் திரைப்படமும் அடக்கம்

கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால், நடுவில் சில மாதங்கள் திறக்கப்பட்ட திரையரங்குகள், பொது இடங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஃஹத் ஃபாசிலின் மாலிக் மற்றும் ப்ரித்விராஜ் நடிப்பில் கோல்ட் கேஸ் என இரண்டு படங்களை தயாரித்திருக்கும் ஆண்டோ ஜோசஃப், இரண்டையுமே நேரடியாக ஓடிடியில் வெளியிட ஆயத்தமாகி வருகிறார். இது குறித்து கேரள திரையரங்க சங்கங்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மாலிக் திரைப்படம் மே 13 அன்று வெளியாகவிருந்தது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. தனு பாலக் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்திருக்கும் கோல்ட் கேஸ் திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராகவே உள்ளது.

தேசிய அளவில் கரோனா தொற்று எண்ணிக்கைக் குறைந்து வந்தாலும் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவில்லை. எனவே தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசஃப்பின் முடிவை எதிர்க்கப்போவதில்லை என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே விஜயகுமார் கூறியுள்ளார்.

"தொடர்ந்து பட வெளியீடுகள் தள்ளிப்போவது தயாரிப்பாளர்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கும். அதனால் ஓடிடி வெளியீடுகளை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை. ஆனால் ஒரு சில பிரம்மாண்ட படங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் பெரிய முன் தொகையை செலுத்தியிருப்பதால் அந்தப் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக அனுமதிக்கமாட்டோம்" என்று விஜயகுமார் பேசியுள்ளார்.

முன்னதாக இப்படித் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதை கேரள திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் எதிர்த்தது நினைவுகூரத்தக்கது.

கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எம் ரஞ்சித் பேசுகையில், "ஒரு சில தயாரிப்பாளர்கள் ஓடிடி வெளியீடுக்குப் போகலாம் என்று விரும்புகின்றனர். ஆனால் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற முக்கிய ஓடிடி தளங்கள் ஒரு சில படங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு மொழியிலிருந்து இவ்வளவு படங்கள் வாங்க வேண்டும் என்றோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய வெளியீடு இருக்க வேண்டும் என்றோ இந்தத் தளங்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை.

கண்டிப்பாக வருவாய் ஈட்டும் என்ற உத்திரவாதம் இருக்கும் பெரிய திரைப்படங்களின் உரிமைகளை மட்டுமே அவர்கள் மொத்தமாக வாங்குகின்றனர். மேலும் தற்போது அவர்களது லாபப் பங்கீட்டு விகிதம் என்பது சிறிய பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை. கடந்த ஒரு வருடத்தில் 10 மலையாளத் திரைப்படங்களை மட்டுமே வாங்கியிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய முதல் மலையாளத் திரைப்படம் சூஃபியும் சுஜாதையும். கடந்த வருடம் ஜூலை மாதம் 3ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2, ஸி யூ ஸூன், ஜோஜி, தி கிரேட் இண்டியன் கிச்சன், ஜோஜி உள்ளிட்ட இன்னும் சில படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாயின.

இன்னொரு பக்கம் கேரள திரைத்துறையின் சங்கங்கள் சேர்ந்து தனியாக ஓடிடி தளம் ஒன்றை ஆரம்பிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அதிக அளவில் மக்கள் சந்தா செலுத்தி பார்க்க கைவசம் நிறைய படங்களின் உரிமைகள் இருக்க வேண்டும். சில படங்களை வைத்து நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் இந்த யோசனை இன்னும் பரீசிலினையில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.


எஸ் ஆர் பிரவீன் (இந்து ஆங்கிலம்), தமிழில் கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்