செயலாளரின் சர்ச்சைக் கருத்து: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து பார்வதி ராஜினாமா

By செய்திப்பிரிவு

மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் எடவேல் பாபுவின் கருத்துகளைக் கண்டித்து, நடிகை பார்வதி சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

2017-ம் ஆண்டு, நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளானார். நடிகர் திலீப் இந்த வழக்கில் ஒரு குற்றவாளி. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் எடவேல் பாபுவிடம், திரையுலக ஊழியர்களின் நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படத்தில் அந்த நடிகை இடம்பெறுவாரா என்று கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பாபு, அந்த நடிகை சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றும், இறந்தவர்களைத் தங்களால் உயிர்ப்பிக்க முடியாது என்றும் பதில் கூறியுள்ளார். இந்தக் கருத்துகளைக் கண்டித்தே பார்வதி தற்போது சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வதி பகிர்ந்துள்ள பதிவின் தமிழாக்கம்:

"2018-ம் ஆண்டு, சங்கத்திலிருந்து எனது நண்பர்கள் ராஜினாமா செய்தபோது நான் செய்யவில்லை. இந்த உடைந்துபோன அமைப்பில் ஒரு சிலராவது தொடர்ந்து பணியாற்றி அதைச் சரி செய்ய உதவ வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அம்மாவின் பொதுச் செயலாளர் தொலைக்காட்சியில் பேசியதைப் பார்த்தபின், இந்தச் சங்கத்தில் ஏதாவது மாறும் என்ற என் நம்பிக்கையை மொத்தமாகக் கைவிட்டுவிட்டேன்.

இந்தச் சங்கத்தால் கைவிடப்பட்ட, தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிய ஒரு பெண்ணை, இறந்த நபரோடு ஒப்பிட்டுப் பேசியது அருவருப்பான, மிக மோசமான கருத்து. திருத்துவதற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள். பாபு தான் ஒரு உவமையை மட்டுமே சொன்னதாக நம்பலாம். ஆனால், அது அவரது அருவருப்பான குணத்தையே காட்டுகிறது. அவரை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.

ஊடகம் இந்தக் கருத்துகளை விவாதிக்கும்போது, அவரது வழிகாட்டிகள் பலர் அவரை ஆதரிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். இதை நான் தீர்மானமாகச் சொல்வேன். ஏனென்றால், பெண்களைப் பற்றிய பிரச்சினைகளை அவர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

உடனடியாக நான் அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன். மேலும், எடவேலா பாபு ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கடுமையாகக் கோருகிறேன். மனசாட்சியுள்ள மற்ற உறுப்பினர்கள் இதையே கோருவார்கள் என்று நம்புகிறேன்.

என்ன நடக்கப் போகிறது என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். நலம் புரிவோம் என்கிற நீர்க்குமிழிக்குள் இருப்பது எல்லாம் ஊழல் செய்பவர்கள் என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு பார்வதி தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கமான 'அம்மா', நலிந்த திரைக் கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதற்காக திரைப்படம் எடுக்க முடிவெடுத்துள்ளது. இந்தப் புதிய திரைப்படத்தை மலையாளத்தின் பிரபல இயக்குநர், தேசிய விருது வென்ற டிகே ராஜீவ் குமார் இயக்குகிறார். ஏற்கெனவே 2008-ம் ஆண்டு இப்படி நிதி திரட்டுவதற்காக அம்மா அமைப்பு ஒரு திரைப்படம் எடுத்தது நினைவுகூரத்தக்கது. இதை அம்மா சார்பாக நடிகர் திலீப் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE