கன்னட திரையுலகில் போதைப் பொருள் புழக்கமா? - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மறுப்பு

By ஐஏஎன்எஸ்

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆண்டி ஜம்போ என்பவரிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கி, பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுக்கு வீடுகளுக்கே சென்று விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் கன்னட திரைப்பட இயக்குநரும், பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாகவும்,
சமூகத்துக்கு அழிவை ஏற்படுத்தும் போதைப் பொருளை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் இந்திரஜித் லங்கேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (கேஎஃப்சிசி) இந்திரஜித்தின் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது.

இது குறித்து கேஎஃப்சிசி பிரதிநிதியான சா.ரா. கோவிந்து கூறியதாவது:

கன்னட நடிகர்கள் மீது லங்கேஷ் கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். நடிகர்களுக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி முதலில் லங்கேஷ் எங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் போலீஸிடம் சென்று தவறான தகவல்களை அளித்துள்ளார்.

லங்கேஷ் ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்தபோதும் அவர் எங்களிடம் இந்த விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை.

இவ்வாறு கோவிந்து கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE