அஞ்சலி: இயக்குநர் சச்சி - மின்னி மறைந்த நட்சத்திரம்!

By மண்குதிரை

மலையாளத்தின் முன்னணித் திரைக்கதை ஆசிரியரான சச்சி என அழைக்கப்படும் சச்சிதானந்தன் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகிவிட்டார். 2007-ல் கதை, திரைக்கதை ஆசிரியராக மலையாள சினிமாவுக்குள் நுழைந்த சச்சி சமீபத்தில்தான் இயக்குநராக மின்னத் தொடங்கினா. மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அவரது ‘அய்யப்பனும் கோஷியும்’ ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் புகை விலகுவதற்குள் சச்சி மறைந்துவிட்டார்.

திருச்சூருக்கு அருகில் கொடுங்கல்லூரைச் சொந்த ஊராகக் கொண்ட சச்சி, வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கேரள உயர் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் வழக்கறிஞராகச் செயலாற்றியுள்ளார். மலியங்கரை ஸ்ரீ நாரயண மங்கலம் கல்லூரியில் இளநிலை படிக்கும் காலகட்டத்திலேயே சினிமா மீதான ஆர்வம் அவருக்குத் துளிர்க்கத் தொடங்கியது. மாற்று சினிமா திரைப்பட இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். அதன் மூலம் சர்வதேச சினிமாக்கள் பலவற்றையும் கண்டுள்ளார். சினிமா மோகத்தால் புனே திரைப்படக் கல்லூரியில் சேர முயன்றுள்ளார். ஆனால், குடும்பத்தினர் அவரை சிஏ படிக்க நிர்பந்தித்துள்ளனர். பிறகு எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால், அது பின்னால் தனக்கு நன்மை செய்ததாக ஒரு நேர்காணலில் சச்சி சொல்லியிருக்கிறார். “புனே இன்ஸ்டிடியூட்டில் சேராதது எனக்கும் நல்லது. சினிமாவுக்கும் நல்லது” எனச் சொல்லியிருக்கிறார் சச்சி.

கேரள உயர் நீதிமன்றத்தில் பேர்பெற்ற வழக்கறிஞராக இருந்த காலகட்டத்தில் தன் சினிமா கனவுக்காக அதைக் கைவிடத் தீர்மானித்தார் சச்சி. சக வழக்கறிஞரான சேதுமாதவன் மூலம் தான் மறந்த சினிமா கனவை மீண்டும் புதுப்பித்துள்ளார். இருவரும் இணைந்து ‘ராபின்ஹூட்’ என்னும் படத்தை எழுதி, இயக்க முடிவுசெய்துள்ளனர். அதுல் குல்கர்னியும், புதுமுகம் அருணும் நடிப்பதாக இருந்த அந்தப் படம் பூஜையுடன் நின்று போனது. அதன் பிறகுதான் இயக்கத்தைத் தற்காலத்துக்கு நிறுத்திவிட்டு இருவரும் திரைக்கதை எழுதத் தீர்மானித்தனர். அப்படித்தான் இந்த இணையின் முதல் படமான ‘சாக்லேட்’ மலையாளத்தின் முன்னணி இயக்குநர் ஷாஃபி இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியால் சித்திக் – லால், போபி-சஞ்சய், ராஃபி –மெக்கார்டின், உதய் கிருஷ்ணா – சிபி கே தோமஸ், ஷியாம் புஷ்கரன் – திலீஷ் நாயர் என மலையாளத்தின் வெற்றிபெற்ற இரட்டைக் கதாசிரியர்களின் ராஜபாட்டையில் இந்தக் கூட்டணியும் இணைந்தது.

சச்சி-சேது இணை தொடர்ந்து ஐந்து படங்களில் பணிபுரிந்தனர். 2012-ல் வெளிவந்த ‘ரன் பேபி ரன்’ படம் சச்சி, சேதுவிடம் இருந்து பிரிந்து திரைக்கதை எழுதிய படம். ஜோஷி இயக்கத்தில், மோகன்லால், பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் சச்சியின் தனித்துவம் வெளிப்படத் தொடங்கியது. ஊடகத் துறையின் அரசியலை அம்பலப்படுத்திய இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. நடப்பு அரசியலின் மோசடிகளையும் படம் சொல்லியது. ஆனால், தான் ஒரு வணிக ரீதியான சினிமாக்காரர்தான் என சச்சி அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

“என் படத்தின் அரசியலுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. திரைப்பட இயக்கக் காலகட்டத்தில் வணிக சினிமாக்கள் மீது தனக்கும் மரியாதையே இல்லை. ஆனால் இப்போது அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறேன். தான் விருதுகளுக்காகப் படம் இயக்குபவன் அல்ல என்பதில் தெளிவாக இருக்கிறேன்” எனச் சொல்லியிருக்கிறார்.

2015-ல் ‘அனார்கலி’ மூலம் சச்சி தான் நினைத்ததுபோல் இயக்குநராக ஆனார். தமிழும் மலையாளமும் கலந்த மொழி பேசும் லட்சத்தீவின் பின்னணியைத் தத்ரூபமாக இந்தப் படத்தில் சித்தரித்திருப்பார் சச்சி. அழகான காதல் கதையான இந்தப் படம் சச்சிக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தது.

சச்சியின் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படமான ‘ராம்லீலா’ நடிகை கடத்தப்பட்ட வழக்கில் திலீப் சிறையில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்தது. அருண் கோபி இயக்கியிருந்த இந்தப் படத்தின் வசனங்கள் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த திலீபுக்குப் பொருந்திப்போவதாக இருந்தன. அந்த ரீதியில் இந்தப் படம் திருத்தமான கதைக்கும் வசனத்துக்கும் கவனத்தை ஈர்த்தது. படத்தின் கதைப்படி திலீப், போலீஸ் கொலைக் குற்றத்துக்காக கைதுசெய்யும். சாட்சியங்கள் சேகரிப்பும் நடக்கும். இந்தக் காலகட்டத்தில் திலீபையும் கேரள போலீஸ் கைதுசெய்து, சாட்சியங்கள் எடுப்பதற்கான அழைத்துச் சென்றது ஆகியவை தொலைக்காட்சிகளில் ஒரு வெற்றிபெற்ற திரைப்படத்தைப் போல் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தன. திலீபுக்கு எதிரான பொதுச் சமூகத்தில் இருந்த பாதகமான மனநிலை உருவாகியிருந்த காலகட்டத்தில் திலீபை நாயகனாக்கிய இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து வசூல் சாதனை புரிந்தது.

மேலும் இந்தப் படம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரு பெரும் அரசியல் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தது. “குடி, சிகரெட் மாதிரி ஏதாவது கெட்ட பழக்கம் உண்டா?” என்ற கேள்விக்கு திலீப் கதாபாத்திரம், “இருந்தது, இப்ப விட்டுவிட்டேன், கம்யூனிசம்” எனச் சொல்லிக் கம்யூனிஸ்ட் கரை வேட்டியைக் குப்பைத் தொட்டியில் வீசும். இந்த வசனம் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் திலீப் வழக்கறிஞராக இருப்பார். இந்தக் கதாபாத்திரம் மூலம் 8 வருஷம் உயர் நீதிமன்றத்தில் வெற்றிபெற்ற வழக்கறிஞராக இருந்த சச்சி தன்னை வெளிப்படுத்தியிருப்பார்.

ஜூனியர் லால் இயக்கத்தில் சச்சி திரைக்கதையில் 2019 டிசம்பரில் வெளிவந்த ‘ட்ரைவிங் லைசன்ஸ்’ படமும் சச்சிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஒரு சூப்பர் ஸ்டாருக்கும் அவருடைய தீவிர ரசிகனுக்கும் வரும் தன்முனைப்பு மோதல்தான் (Ego clashes) அந்தப் படத்தின் மையம். சுராஜ் வெஞ்சாரமூடும் ப்ரித்விராஜும் இணைந்து நடித்த அந்தப் படத்தில் கதாபாத்திரங்கள் இரண்டும் தங்கள் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒன்றையொன்று வீழ்த்த முயலும். மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ’அய்யப்பனும் கோஷியும்’ படமும் கிட்டதட்ட இதே மையச்சரடில் கட்டப்பட்டதுதான். அரசியல், அதிகாரவர்க்கப் பிடிப்புள்ள ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த போலீஸுக்கும் இடையிலான தன்முனைப்பு மோதலாக இந்தப் படத்தை சச்சி எழுதி, இயக்கியிருப்பார். ஒரே மையச் சரடில் இரு கதைகளை அடுத்து அடுத்து உருவாக்கியது சச்சியின் திரைக்கதைத் திறனுக்குச் சாட்சி.

இந்தப் படம் சச்சிக்கு, மலையாளத்தின் முன்னணி இயக்குநர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அடுத்து அரசியல் காத்திரம் உள்ள படங்களை இயக்கவிருப்பதாக சச்சி சொல்லியிருந்தார். நெருக்கடி காலகட்ட நிலையைக் குறித்த ஒரு படம் இயக்கவிருந்தார். சினிமாவை வெறும் கலையாக மட்டும் பார்க்காமல் அதன் வெகுஜன ரசனையைப் புரிந்துகொண்டவர் சச்சி. அவர் இழப்பு அந்த வகையில் மலையாள சினிமாவின் வளர்ச்சிக்குப் பாதகமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்