மோகன்லால் 60-ம் பிறந்த நாள் ஸ்பெஷல்: கண்களாலும் கம்பீரத்தாலும் உச்சம் தொட்ட நடிப்பு மேதை

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மோகன்லாலுக்கு இன்று (மே 21) 60-ம் பிறந்த நாள். 60 வயதை நிறைவு செய்வது என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். இந்திய அரசு கணக்குப்படி அவர் மூத்த குடிமகன் ஆகிறார். பண்பாட்டு ரீதியாகப் பார்த்தாலும் 60 வயதை நிறைவு செய்பவர்களுக்கு மணிவிழா கொண்டாடப்படுவது இந்தியா முழுவதும் இருக்கும் வழக்கம். இந்த 60 ஆண்டுகளில் 40 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் இயங்கி வருபவர் மோகன்லால். இந்த நெடும்பயணத்தில் நடிப்பில் பல உச்சங்களைத் தொட்டவர். காலத்தை வென்ற பல திரைக் காவியங்களில் நடித்து இந்திய சினிமாவின் புகழைப் பல படிகள் உயர்த்தியவர்

நடிப்பைக் கைவிடாத நட்சத்திரம்

மலையாள சினிமாவில் இன்று வரை உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார். பொதுவாக நட்சத்திர அந்தஸ்தைத் தக்கவைக்க நடிப்புத் திறமைக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ஆனால் நடிப்பு, நட்சத்திர அந்தஸ்து என்று இரண்டையும் சமமான முக்கியத்துவத்துடன் கையாண்ட மிகச் சில திரைக்கலைஞர்களில் மோகன்லாலும் ஒருவர். எனவே கதாநாயக நடிகர்களில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அனைத்து வகைமைகளையும் சேர்ந்த நடிகர்களின் பட்டியலை எடுத்தாலும் நூறாண்டைக் கடந்துவிட்ட இந்திய சினிமா வரலாற்றில் தலை சிறந்த பத்து நடிகர்களைப் பட்டியலிட வேண்டுமென்றால் அதில் தவறாமல் இடம்பெறக்கூடியவர் மோகன்லால். மலையாள சினிமாத் துறை ரசிகர்களின் ரசனை ஆகியவை இதற்கு இசைவாக இருந்தது என்றாலும் நட்சத்திரமாகிவிட்ட பிறகும் அடிப்படையில் சிறந்த நடிகராகவே அறியப்பட வேண்டும் என்ற மோகன்லாலின் முனைப்பே இதற்கு முக்கியக் காரணம்.

படிப்படியான வளர்ச்சி

1980-களின் தொடக்கத்தில் நடிக்கத் தொடங்கிய மோகன்லால் முதலில் வில்லனாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துவந்தவர். அதன் பிறகு படிப்படியாக நாயக நடிகராக உயர்ந்தார். அரவிந்தன், ஹரிஹரன். பத்மராஜன், பரதன், லோஹிததாஸ் என மலையாள சினிமாவின் எழுத்தாளர்கள் இயக்குநர்களுடன் கரம் கோத்து தன் அசாத்திய நடிப்புத் திறமையை எண்ணற்ற படங்களில் வெளிப்படுத்தி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.

விருதுகளின் நாயகன்

1989-ல் லோகிததாஸ் எழுதி சிபி மலையில் இயக்கத்தில் வெளியான ‘கிரீடம்’ மோகன்லாலின் திரைவாழ்வில் மட்டுமல்லாமல் மலையாள சினிமா வரலாற்றிலும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தப் படத்தில் காவலரான தந்தையின் ஆசைப்படி காவல்துறையில் சேர முயன்று சூழ்நிலையால் கொலையாளியாகும் எளிய மனிதனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் மோகன்லால்,. இறுதிக் காட்சியில் கொலை செய்துவிட்ட பிறகு தந்தையைப் பார்த்து அவர் கதறி அழும் காட்சி இந்திய சினிமாவில் ஓர் பொன்னோவியமாக இடம்பெறத்தக்கது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிப்புக்கான சிறப்புப் பாராட்டு (Special Mention) தேசிய விருது கிடைத்தது. இதுவே மோகன்லால் பெற்ற முதல் தேசிய விருது.

அடுத்ததாக ’பரதன்’ (1991), ’வானப்பிரஸ்தம்’ ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் மோகன்லால். இவற்றில் ‘வானப்பிரஸ்தம்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. மோகன்லால் இதில் கதக்களி கலைஞராக நடித்திருந்தார். 2016-ல் இன்னொருமுறை சிறப்புப் பாராட்டு தேசிய விருதைப் பெற்றார். இவை தவிர கேரள அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருது என பல விருதுகளைக் குவித்துள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பதம்பூஷண் விருதுகளும் இவருடைய திரைத் துறை பங்களிப்புக்கான அங்கீகாரமாகத் திகழ்கின்றன.

தமிழிலும் அழியாத் தடங்கள்

1990களில் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ப்ரியதர்ஷன் இயக்கிய ‘சிறைச்சாலை’, மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அவரை அரியாசனத்தில் அமர்த்தின. ‘இருவர்’ படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக அரசியலில் தோல்வியே அடையாத முதல்வராகவும் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்ட ஆனந்தன் கதாபாத்திரத்தில் ஒரு எளிய மனிதன் ஒரு மாநிலத்தின் கோடிக் கணக்கான மக்களால் கடவுளுக்கு இணையாகக் கொண்டாடப்படும் தலைவனாக உருவாகும் பயணத்தை அவ்வளவு சிறப்பாகவும் உயிர்ப்புடனும் நிகழ்த்திக் காட்டினார்.

‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் கமிஷனராக கமல்ஹாசனுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். அந்த இரு பெரும் நடிப்பாளுமைகளை ஒரே படத்தில் பார்த்து ரசிப்பதே ரசிகர்களுக்குப் பேரானந்த அனுபவமாக இருந்தது. ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தந்தையாக படம் முழுவதும் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி கம்பீரமான தோற்றத்தினாலேயே ரசிகர்களை ஈர்த்தார். தெலுங்கு, கன்னடம். இந்தி மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார்.

புத்தாயிரத்தில் புதிய சாதனைகள்

2000-ம் ஆண்டுக்குப் பிறகும் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்த மோகன்லால் கடந்த பத்தாண்டுகளில் புதிய அலை இயக்குநர்களுடன் இணைந்து தன்னைக் காலத்துக்கேற்ப தகவமைத்துக்கொண்டுவருகிறார். 2013-ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றதோடு தமிழ் உட்பட பல மொழிகளில் மறு ஆக்கம் கண்டது. மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்தது அந்தப் படத்தின் வெற்றி. அந்தப் படத்திலும் ஒரு படிப்பறிவில்லாத சினிமா பார்த்து சாதுரியத்தை வளர்த்துக்கொண்ட எளிய குடும்பத் தலைவனைக் கண்முன் நிறுத்தியிருந்தார் மோகன்லால். எதிர்பாராவிதமாக கொலை செய்துவிட்ட தன் மகளையும் மனைவியையும் காப்பாற்ற வேண்டிய ஜார்ஜ்குட்டியின் பதற்றம் பார்வையாளர்களையும் தொற்றிக்கொண்டதே அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். அதற்கு மோகன்லாலின் நடிப்பே முதன்மைக் காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதன் பிறகும் ‘புலி முருகன்’, ‘லூசிஃபர்’ அவருடைய பெரும் வெற்றிப் படங்கள் தொடர்கின்றன.

இப்போது ’மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்மம்’, ஜீத்து ஜோசப்பின் ‘ராம்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் மோகன்லால். அடுத்ததாக ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகவும் அதில் மோகன்லாலே நாயகனாக நடிப்பார் என்றும் ஜீத்து ஜோசப் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். எனவே வரும் ஆண்டுகள் மொழி எல்லைகளைக் கடந்த மோகன்லால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாகவே இருக்கப் போகின்றன.

கதாபாத்திரத்துக்கு உயிரூட்டும் கண்கள்

ஒரு நடிகராக கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே உள்வாங்கி அதைக் கண்கள் மற்றும் உடல்மொழி மூலம் வெளிப்படுத்தும் நடிப்புப் பாணியில் உச்சம் தொட்டவர் மோகன்லால். இந்திய சினிமாவில் கண்களில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவரை மிஞ்சியவர் யாரும் இல்லை எனலாம். அந்த வகையில் மோகன்லாலை ஒரு நடிப்பு மேதை என்று மிகையின்றிச் சொல்லலாம்.

ஒரு நடிகராக இன்னும் பல சாதனைகள் புரிந்து இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ நம் பேரன்புக்குரிய லாலேட்டனை மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்