செல்லப் பிராணிகளைக் கைவிடுவதாக வரும் செய்திகள் இதயத்தை நொறுக்குகின்றன: வெங்கடேஷ்

செல்லப் பிராணிகளைக் கைவிடுவதாக வரும் செய்திகள் இதயத்தை நொறுக்குகின்றன என்று நடிகர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சில நாட்களாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் கரோனா பரவும் என்று வதந்தி பரவியது. இந்த வதந்தியினால் பலரும் தங்களுடைய செல்லப் பிராணிகளை வெளியே விட்டுவிடுகிறார்கள்.

செல்லப் பிராணிகள் மூலம் கரோனா பரவாது என்று பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"இது மனித குலத்துக்கு மட்டுமல்லாது, அனைத்து உயிரினங்களுக்குமே கடினமான ஒரு காலகட்டமாகும். தங்கள் செல்லப் பிராணிகள் மூலம் வைரஸ் பரவும் என்று பயந்து மக்கள் அவற்றைக் கைவிடுவதாக வரும் செய்திகள் இதயத்தை நொறுக்குகின்றன. இந்த நம்பிக்கை பொய் என்று எண்ணற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தருணத்தில் நாம் மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. நம்முடைய நண்பர்களான விலங்குகள் மீதும் அன்பைப் பொழிவோம். இந்த ஊரடங்கில் நாம் தொடர்ந்து வீட்டில் இருக்கும் தருணத்தில் அவை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அனைவரையும் நேசிப்போம். அனைத்தும் முடிந்த பிறகு முன்பை விட அதிக வலிமையுடன் நமது புசுபுசு நண்பர்களுடன் இந்த அச்சுறுதலில் இருந்து வெளியே வருவோம்".

இவ்வாறு வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE