மலையாளப் படங்களுக்கு எதிராக மருத்துவர் சங்கம் போர்க்கொடி

By செய்திப்பிரிவு

மலையாளப் படங்களில் தொடர்ந்து மருத்துவத் துறை குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் தவறான முறையில் சித்தரிப்பதைத் தடுக்க வேண்டுமென இந்திய மருத்துவர் சங்கம் மத்திய தணிக்கை வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சமீபகாலமாக மருத்துவத் துறை குறித்தும் மருத்துவ முறைகள் குறித்தும் தவறாகச் சித்தரிக்கும் போக்கு மலையாளப் படங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவர் சங்கம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள 'டிரான்ஸ்' மற்றும் 'ஜோசப்' ஆகிய படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எம்.பத்மகுமார் இயக்கத்தில் வெளியான 'ஜோசப்' திரைப்படத்தில் உறுப்பு தானம் குறித்துச் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் உறுப்பு தானம் செய்ய முன்வரும் மக்கள் மத்தியில் அதுகுறித்து தவறான எண்ணம் ஏற்பட வழிவகுப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

கடந்த வாரம் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘டிரான்ஸ்’ திரைப்படத்தில் மனநல மருத்துவர்கள் குறித்தும், அதற்கான மருந்துகள் குறித்தும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்க மாநில (கேரளா) செயலாளர் பி.கோபிகுமார் கூறுகையில், ''சினிமா என்பது ஒரு சக்திவாய்ந்த ஊடகம். நம் கற்பனைக்கும் எட்டாத அளவு தாக்கத்தை மக்கள் மனதில் சினிமா விதைக்கிறது. உதாரணமாக ‘ஜோசப்’ என்ற திரைப்படம் ரிலீஸான 2019 ஆம் ஆண்டில் உறுப்பு தானம் கிட்டத்தட்ட வெகுவாகக் குறைந்துவிட்டது. அந்த நேரத்தில் ஏறக்குறைய 3000 நோயாளிகள் பல்வேறு உறுப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு உறுப்பு தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

அதே போல ‘டிரான்ஸ்’ திரைப்படம் வெளியான பிறகு அப்படத்தில் ஒரு முக்கிய மருந்தின் பெயர் சொல்லப்படுவதால் பல நோயாளிகள் அம்மருந்தை தங்களுக்கு எழுதித் தரவேண்டாம் என்று கூறுவதாக எங்களுக்குப் புகார்கள் வருகின்றன. இதுபோன்ற விஷயங்களில் மத்திய தணிக்கை வாரியம் தலையிட்டு இதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE