பெங்காலி இயக்குநர் மீது நடிகை மீடூ குற்றச்சாட்டு

பெங்காலி நடிகை ரூபாஞ்சனா மித்ரா, இயக்குநர் அரிந்தாம் சில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

வேலை செய்யும் இடத்தில் நடக்கும் பாலியல் கொடுமை, அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகளை பெண்கள் துணிந்து சொல்ல ஹாலிவுட்டில் #மீடூ என்ற இயக்கம் உதயமானது. கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு நாடுகளில் இந்த மீடூ இயக்கத்தின் தாக்கத்தால் பல்வேறு பிரபலங்கள் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். பாலிவுட்டில் பலர் மீதும் இப்படியான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது பெங்காலி திரைத் துறையில் முதல் முறையாக மீடூ குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. அங்கு பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையான ரூபாஞ்சனா மித்ரா, பிரபல பெங்காலி இயக்குநர் அரிந்தாம் சில் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

"பூமிகன்யா தொலைக்காட்சித் தொடரின் முதல் பகுதியின் திரைக்கதையைப் படிக்க அவரது அலுவலகத்துக்கு என்னை வரச்சொன்னார். இது நடந்தது துர்கை பூஜைக்கு சில நாட்களுக்கு முன்னால். மாலை 5 மணியளவில் நான் அங்கு சென்றபோது அங்கு அவரைத் தவிர யாரும் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. நான் சற்று வினோதமாக உணர்ந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சட்டென்று அவரது இருக்கையிலிருந்து எழுது வந்து எனது உடல், தலை என அவரது கையைக் கொண்டு போக ஆரம்பித்தார். நானும் அவரும் மட்டுமே அந்த அலுவலகத்தில் இருந்தோம். நான் பலாத்காரம் செய்யப்படுவேனோ என்று பயந்தேன். யாராவது அந்த அறைக்குள் வர மாட்டார்களா என்று பிரார்த்தித்தேன்.

நான் அவர் எதிர்பார்த்ததைப் போன்ற பெண் இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பாரோ என்னவோ உடனே அவர் ஒரு இயக்குநராக மாறி சாதாரணமாக என்னிடம் திரைக்கதை பற்றி பேச ஆரம்பித்தார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரது மனைவி அலுவலகத்துக்குள் வந்தார்" என்று ரூபாஞ்சனா கூறியுள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு தான் உடைந்து அழுததாகவும், இது பற்றி முன்னரே சொல்லாததற்குக் காரணம், குறிப்பிட்ட தொலைக்காட்சியுடன் தான் ஒப்பந்தத்தில் இருந்ததால் அதன் பெயரைக் கெடுக்கும் விதமாக எதுவும் சொல்ல முடியவில்லை என்றும் ரூபாஞ்சனா கூறியுள்ளார்.

இயக்குநர் அரிந்தாம் சில் இது பற்றிய பதிலளித்தபோது, "இது ஒரு அரசியல் சூழ்ச்சி. அவர் ஏன் இதையெல்லாம் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் நண்பர்கள். அவர் சொன்ன அந்தக் குறிப்பிட்ட நாளில் அவர் என் அலுவலகத்திலிருந்து சென்ற பிறகு, நான் ஆர்வமாக இருக்கிறேன், என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தவறாக நடந்த ஒருவருக்கு ஏன் இவர் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவர் பொய் சொல்கிறார்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE