இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏன்? - அல்லு அர்ஜுன் விளக்கம்

இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டது தொடர்பாக அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'நா பேரு சூர்யா, நா அல்லு இந்தியா'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு வேறொரு படத்தை அல்லு அர்ஜுன் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனென்றால், இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் திரும்பியுள்ளார் அல்லு அர்ஜுன். பூஜா ஹெக்டே, தபு, ஜெயராம், சமுத்திரக்கனி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில், "திடீரென இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டது ஏன்" என்ற கேள்விக்கு அல்லு அர்ஜுன், "இந்த இடைவெளி நான் திட்டமிடாதது. 'நா பேரு சூர்யா' படத்துக்குப் பின் தொடர்ந்து தீவிரமான படங்களாக நடித்து வருவதாக நினைத்தேன்.

ஒரு படம் அப்படி இல்லாமல் இலகுவான, எளிமையான படமாக நடிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஒரு நல்ல பொழுதுபோக்கான படத்தில் நடிக்க நினைத்தபோது, அப்படியான கதைகள் எதுவுமே வரவில்லை.

எல்லா இயக்குநர்களாலும் பிரம்மாண்டமான பொழுதுபோக்குப் படங்களைக் கையாள முடியாது. த்ரிவிக்ரமும் தன் படத்தை முடித்திருந்தார். உடனே பேசி இருவருமே சேர்ந்து பணியாற்றினோம். அதற்குத்தான் இவ்வளவு நாட்கள் ஆயின. இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு இருக்க வேண்டும். அதுவாக நடக்கட்டுமே என்று நினைத்தே, அப்படி நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE