அன்புப் பரிசாக ரூ.1.7 கோடி மதிப்புள்ள கார்: சுதீப்பை ஆச்சரியப்படுத்திய சல்மான்

நடிகர் கிச்சா சுதீப்புக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றைப் பரிசாகத் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் சல்மான் கான்.

சல்மான் கானின் சமீபத்திய திரைப்படம் 'தபங் 3'. பிரபுதேவா இயக்கியிருந்த இந்தப் படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடித்திருந்தார். விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தாலும் எல்லா சல்மான் கான் படங்களைப் போலவே 'தபங் 3' படமும் வசூலைக் குவித்துள்ளது.

முன்னதாக படப்பிடிப்பின் போது, தனக்குப் பிடித்த செல்லப் பிராணியின் உருவம் வரையப்பட்டிருந்த ஒரு மேலுறையை (jacket) கிச்சா சுதீப்புக்குப் பரிசாக அளித்தார் சல்மான் கான். தற்போது படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து ரூ.1.7 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ எம்5 மாடல் காரை, சுதீப்புக்குப் பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதைப் புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதீப், "நல்லது செய்யும்போது நமக்கு நல்லதே நடக்கும். இந்த ஆச்சரியம் என் வீட்டு வாசலில் சல்மான் கானுடன் வந்திறங்கியபோது...இந்த வரியின் மீதான என் நம்பிக்கையை சல்மான் இன்னும் உறுதி செய்தார்.

பிஎம்டபிள்யூ எம்5, ஒரு இனிமையான சைகை. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் நீங்கள் பொழியும் அன்புக்கு நன்றி சார். உங்களுடன் நடித்ததும், நீங்கள் எங்களை வந்து பார்த்ததும் ஒரு கவுரவம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE