டிஜிட்டல் யுகம் இல்லாதபோதே ரஜினி சூப்பர் ஸ்டார்: இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் புகழாரம்

டிஜிட்டல் யுகம் இல்லாதபோதே சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் ரஜினி என்று இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் புகழாரம் சூட்டினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

'தர்பார்' படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்றது. இதில் ரஜினி, லைகா சுபாஷ்கரன், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், சுனில் ஷெட்டி மற்றும் நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தெலுங்குத் திரையுலகிலிருந்து தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, ஹரிஷ் ஷங்கர், மாருதி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் பேசும்போது, "நான் இந்த விழாவுக்கு ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன். இயக்குநராக அல்ல. அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. இன்று எல்லோரும் பட வசூல் குறித்துப் போட்டியிடுகின்றோம்.

டிஆர்பி ரேட்டிங் குறித்துப் போட்டியிடுகின்றோம். டிஜிட்டல் புரட்சிக்குப் பிறகு இப்படியான நிறைய போட்டிகள் வந்துவிட்டன. ஆனால், இதெல்லாம் இல்லாத போதே ரஜினிகாந்த் தனது படங்களின் மூலம் அத்தனை சாதனைகளையும் முறியடித்தவர். அப்போது இதுபோல பட வெளியீட்டுக்கென நிறைய நிகழ்ச்சிகள் கூட நடக்காது. நான் பார்த்ததில்லை. ஆனால் அப்போதே ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்.

ரஜினியின் சிறப்பு என்னவென்றால், அவர் எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி மக்கள் அவரை அவர்கள் ஊரைச் சேர்ந்தவராக ஏற்றுக்கொள்வார்கள். சார் நீங்கள் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அல்ல, இந்திய சூப்பர் ஸ்டார். எனக்கு இங்கு இருப்பதில் பெருமை.

ரொம்ப நேரமாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டாம் எனக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதை இங்கு சொல்கிறேன். ரஜினி சார்... நீங்கள் ஷங்கர் சாருடன் பணியாற்றி விட்டீர்கள். இந்த ஹரிஷ் ஷங்கருடன் கூட முயற்சி செய்யுங்கள். மிக்க நன்றி" என்று பேசினார் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர்.

ஷங்கர், ஹரிஷ் ஷங்கர் என்ற வார்த்தைகளை வைத்து அவர் விளையாட்டாகப் பேசிய ஒரு விஷயத்தை இணையத்தில் வழக்கம் போல ஊதிப் பெரிதாக்கி ஹரிஷ் ஷங்கரை சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE