காவல்துறையினரே சட்டம் கிடையாது: சித்தார்த்

காவல்துறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவர்களே சட்டம் கிடையாது என்று ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக சித்தார்த் தெரிவித்துள்ளார்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

விளைவுகள் இல்லாமல் காவல்துறை அவர்களுக்குத் தேவையானவர்களை கொன்றதற்கான பதிவுகள் இருக்கின்றன. அவர்கள் நடவடிக்கையைக் கொண்டாடுவது, என்னதான் உணர்ச்சிவசப்படுவதாகச் சொன்னாலும், அது காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதாகவே ஆகும்.

காவல்துறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவர்களே சட்டம் கிடையாது. பலாத்காரம் செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் இது சரியான வழி அல்ல. நம் மக்களுக்கு நீதித்துறை மிது நம்பிக்கை போய்விட்டது. நமது நீதிமன்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதிகாரத்தில் இருப்பவர்களால் அதன் அங்கீகாரம் தினமும் பறிபோகிறது.

ஒவ்வொரு குடிமகனும் சரிசமமாக நடத்தப்பட்டால்தான் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த மொத்த அமைப்பும் புதுப்பிக்கப்பட வேண்டும். அது எப்படி என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE