திறப்புவிழா கூட்ட நெரிசலில் அடிபட்டு அழுத நடிகை

By செய்திப்பிரிவு

சூப்பர்மார்கெட் திறப்புவிழாவுக்குச் சென்ற நடிகை நூரின், கூட்ட நெரிசலில் காயம்பட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நூரின் ஷெரீஃப். இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே படத்தின் ஒரு பாடல் மூலம் படத்தின் இன்னொரு நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் பிரபலமானாலும் படத்தின் நாயகி நூரின் தான் என்பது படம் வெளியானதும் பலருக்குப் புரிந்தது.

சமீபத்தில் மலப்புரம் மாவட்டத்தில் மஞ்சேரி என்ற பகுதியில் புதிய சூப்பர் மார்கெட் ஒன்றை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக நூரின் அழைக்கப்பட்டிருந்தார். அவரைக் காண வந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய நூரினுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. அடிபட்ட அதிர்ச்சியில் நூரின் அந்த விழாவில் இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

மாலை 4 மணி திறப்பு விழாவுக்கு வரவேண்டிய நூரின் 6 மணிக்கு வந்ததாகவும், பொறுமையிழந்த ரசிகர்கள் சிலரே அவரை சூழ்ந்து தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூரினை தாக்கியது யார் என்பது இன்னமும் தெரியவில்லை. காயப்பட்டாலும், சுதாரித்துக் கொண்டு சிறிது நேரம் கழித்து நூரின் அங்கிருப்பவர்களிடம் கலந்து பேசி நிலைமையை சகஜமாக்கிவிட்டே புறப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி பேசியுள்ள நூரினின் தாய், அவர்கள் சரியான நேரத்துக்கே விழாவுக்கு வந்ததாகவும், கூட்டம் சேர வேண்டும் என சூப்பர் மார்கெட் உரிமையாளர்கள் தான் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். அங்கு காவலுக்காக இருந்த 4 பவுன்சர்களால் அங்கு கட்டுப்பாடை இழந்த கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE