சராசரி குடும்பப் பின்னணியில் உள்ள ஐந்து பெண்கள் சேர்ந்து அவர்களின் எதிரியை பழிவாங்கப் புறப்பட்டால் அவர்களுக்கு ஓர் ஆண் பக்கபலமாக இருந்தால் அவனே 'கேங் லீடர்'.
இளைஞர்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடித்து ரூ.300 கோடி பணத்தைத் திருடுகிறார்கள். இக்கொள்ளைச் சம்பவத்தின்போது 5 இளைஞர்களும் ஒரு முதியவரும் ஒரு நாயும் கொல்லப்படுகிறார்கள். இச்சம்பவத்தால் தன் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையை இழந்த லட்சுமி பாதிக்கப்படுகிறார். மற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட நால்வரையும் பரிசு விழுந்ததாகச் சொல்லி அழைக்கிறார். அக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு கொலை செய்து தப்பித்த எதிரியைக் கொல்ல வேண்டும் என்றும் அதற்கு மற்ற மூன்று பெண்களும் உதவ வேண்டும் என்றும் லட்சுமி கேட்கிறார். அந்த மூவரும் முதலில் தயங்கி பிறகு தங்கள் குடும்பத்தின் ஆதார ஜீவனைக் கொன்ற வில்லனைப் பழிதீர்க்கச் சம்மதிக்கின்றனர். கொலையாளியைக் கண்டுபிடிப்பது, அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுவது, உள்ளிட்ட வேலைகளுக்காக பழிவாங்கும் நாவல்கள் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளர் நானியைச் சந்திக்கின்றனர். அவர்களை நானி விரட்டி அடிக்கிறார்.
நானியின் பதிப்பாள நண்பர் சொல்லும் ஆலோசனையின் பேரில் லட்சுமியின் பழிவாங்கும் படலத்துக்குச் சம்மதிக்கிறார். வங்கிக் கொள்ளையின் பின்னணி என்ன, யார் அந்தக் கொலையாளி, ஆறு பேரால் கொலையாளியைப் பழிதீர்க்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
ஒரு கதைக்குத் தேவையான அம்சங்களில் மட்டும் சமரசம் இல்லாமல் கறார்த்தனம் காட்டி திரைக்கதைக்கான கச்சிதக்காரனாக இயக்குநர் விக்ரம் குமார் ஆச்சரியப்பட வைக்கிறார். எதையெல்லாம் பலவீனம் என்று நம்புகிறோமோ அதை அப்படியே பலமாக மாற்றி அசரவைக்கிறார்.
படத்தின் 'கேங் லீடர்' நானிதான். எழுத்தாளர் பென்சில் பார்த்தசாரதியாக மனிதர் நகைச்சுவையைத் தெறிக்க விடுகிறார். சின்னச் சின்ன டைமிங், சீரியஸ் ரியாக்ஷன், ஆக்ஷன், காதல், பாசம், சென்டிமென்ட் எனப் புகுந்து அதகளம் பண்ணுகிறார். போலி ஐடி கார்டு தயார் செய்த பெருமைக்கு அலப்பறை கூட்டுவது, கிரியேட்டிவ்ல சுதந்திரம் இல்லை, காப்பி பண்றதுலதான் சுதந்திரம் இருக்கு என காமெடி பண்ணுவது, பிரான்யாவின் தவிப்பை உணர்ந்து பாசத்தைக் கொட்டுவது என நாயகனாக ரசிக்க வைக்கிறார்.
பிரியங்கா அருள் மோகனுக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. நிச்சயமான மணமகன் இறந்த நிலையில் மோதிரத்தைப் பார்த்து துயர் அடைவது, மெல்ல மெல்ல நானியின் மனதை அறிவது, மனதுக்குள் புகுந்த நானியின் கரம் பற்றுவது என நாயகிக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளார்.
சரண்யா பொன்வண்ணன் வழக்கமான அம்மாவின் பாசத்தை வஞ்சனையில்லாமல் கொட்டுகிறார். ஷ்ரியா ரெட்டி தங்கையின் பாசத்தையும் அண்ணன் இல்லாத வெறுமையையும் நடிப்பில் கடத்துகிறார். கிடைக்கும் இடங்களில் சிறுமி பிரான்யா அழகாக ஸ்கோர் செய்கிறார். லட்சுமி எல்லாவற்றையும் மீறி நடிப்பாளுமையால் கவர்கிறார்.
பைக் ரேஸராக வரும் கார்த்திகேயா தோற்றத்தில் கம்பீரம் காட்டுகிறார். நடிப்பில் ஒரே மாதிரி ரியாக்ஷன்களால் சோதிக்கிறார். நானியின் நண்பராக வரும் பிரியதர்ஷி, ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் சத்யா, இன்ஸ்பெக்டராக வரும் அனிஷ் குருவில்லா, இரண்டே காட்சிகளில் வந்தாலும் கிளாப்ஸ் அள்ளும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.
மிரோஸ்லா கூபாவின் ஒளிப்பதிவும் அனிருத்தின் இசையும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன. நவீன் நூலியின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.
விக்ரம் குமார் இரண்டு சவாலான விஷயங்களில் சாதித்திருக்கிறார். எதையெல்லாம் நம்பமுடியாததாக காட்சிப்படுத்தினாரோ அதையெல்லாம் நம்பும் அளவுக்கு ஏற்கும் அளவுக்கு திரைக்கதை பின்னியிருக்கிறார். எதையெல்லாம் காமெடி என்கிற பெயரில் கடந்து போகச் செய்தாரோ அதே வாசகங்களை முன்வைத்து சென்டிமென்ட்டில் உச்சம் தொடுகிறார். அநாவசிய சபதங்கள், பழிவாங்கல்கள், பஞ்ச் வசனங்கள் படத்தில் இல்லாதது பெரிய ஆறுதல்.
நானியின் கதாபாத்திரம் குறித்த பின்னணி தெளிவாகச் சொல்லப்படவில்லை. அந்த கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் அம்சம்தான் என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், படம் பார்க்கும்போது இந்தக் குறைகள் மனதில் எழாவண்ணம் நானியும் லட்சுமியும் விக்ரம் குமாரும் மேஜிக் நிகழ்த்தியுள்ளார்கள். திரைக்கதைக்கான முழு நியாயத்தை விக்ரம் குமார் மிக நேர்மையாக அணுகியிருக்கிறார். அதுவே படத்தின் ஆகச் சிறந்த பலம். மொத்தத்தில் 'கேங் லீடர்' வசீகரிக்கிறான்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago