பாஹூபலி இசை வெளியீடு ஒத்திவைப்பு: ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ராஜமெளலி



மே 31ம் தேதி நடைபெற இருந்த 'பாஹூபலி' படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதற்கு இயக்குநர் ராஜமெளலி விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த திரைப்படம் 'பாஹூபலி (தமிழில் மகாபலி)'. வரலாற்றுப் படமாக உருவாகி வரும் 'பாஹூபலி'யில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மே 31ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக தற்போது அந்த விழா ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

'பாஹூபலி' இசை வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என இயக்குநர் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதில் அவர் கூறியிருப்பது:

"நீங்கள் அனைவரும் அறிந்தது போல், இம்மாதம் 31-ம் தேதி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிடுவதே முதற்கட்ட திட்டமாக இருந்தது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து படத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே முதலில் ஏற்பாடு செய்திருந்தோம்.துரதிர்ஷ்டவசமாக ஆடியோ வெளியீட்டு விழா குறித்த பாதுகாப்பு பிரச்சினைகள் எழுந்தன. ஆனால் தொடக்கத்தில் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்து வந்தன.

எங்களிடம் தேவையான போலீஸ் அனுமதிகளும், அரங்கத்துக்குள் நுழைவது, வெளியேறுவது, வாகன நிறுத்தங்கள் பற்றியும் நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டுவிட்டோம்.

இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ளும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஹைடெக்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது பற்றி தங்கள் கவலையை தெரிவித்தனர். பிற விழாக்கள் சிலவற்றில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பு பற்றி போலீஸ் தங்களது கவலைகளையும், அச்சங்களையும் எங்களிடம் தெரிவித்தனர்.

அதாவது விழாவில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த வரம்புக்குள் இருந்தால் விழாவை நடத்தும் படி அவர்கள் எங்களுக்கு ஏற்கெனவே அனுமதி அளித்து விட்டனர். ஆனால் எங்கள் குழுவினர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆண்டுக்கணக்காக ரசிகர்கள் எங்களை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் சிலரை விடுத்து விழாவை நடத்த மனம் வரவில்லை.எனவே, விழாவை ஒத்திப் போடுவதால் ஏற்படும் விளைவை விட, சில ரசிகர்களை இழப்பதால் ஏற்படும் விளைவு மோசமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

நாங்கள் விழா தேதி பற்றி பரிசீலித்து வருகிறோம், விரைவில் விழா நடைபெறும் மாற்றுத் தேதி அறிவிக்கப்படும். தற்போது செய்தியாளர்களை அழைத்ததே, ஆடியோ வெளியீடு தள்ளி வைக்கப்படுவது குறித்து மன்னிப்பு கேட்கத்தான்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் எங்களிட முழுதான தெளிவு பிறக்கவில்லை. இருப்பினும் நாங்கள் ஒரு நல்ல தீர்வு கண்டு பாஹுபலி ஆடியோ வெளியீட்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அனைத்து ரசிகர்களையும் வரவேற்கும் தீர்வைக் காண்போம்." என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE