தனியாக உருவாகும் பாஹூபலியின் சர்வதேச பதிப்பு

தெலுங்குத் திரையுலகில் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாஹூபலி திரைப்படம், சர்வதேச பதிப்புக்காக தனியாக தொகுக்கப்படவுள்ளது. இதில் இந்தியாவில் வெளியாகும் பதிப்பில் இருக்கும் பாடல்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹதீரா, நான் ஈ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜமவுலியின் அடுத்த திரைப்படம் பாஹூபலி (தமிழில் மகாபலி). வரலாற்றுப் படமாக உருவாகி வரும் பாஹூபலியில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்போது மற்ற நாடுகளில் இருக்கும் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு, இரண்டு பாகங்களின் நீளமும் குறைக்கப்பட்டு, சர்வதேச பதிப்பு ஒன்று தனியாக வெளியாகவுள்ளது என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

"இந்தப் படம் ஒரு கற்பனைக் காலத்தில் நடக்கிறது. அதே சமயம் முழுக்க முழுக்க ராஜமவுலியின் அசல் கற்பனையில் விளைந்த கதை. ஏனென்றால் இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் உருவாக்க விரும்பவில்லை" என படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா தெரிவித்துள்ளார்.

அர்கா மீடிய வொர்கஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட் இதுவரை எந்த தெலுங்கு படத்துக்கும் இல்லாத அளவிற்கு, 200 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 290 நிமிடங்கள் ஓடும் பாஹூபலி, இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.

ஜூலை மாதம் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் இந்தி டப்பிங் உரிமையைப் பெற்றிருப்பவர் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE