கவர்ச்சிக் காட்சி கூடாது - ஹன்சிகா எதிர்க்கும் டப்பிங் படம்

தெலுங்கில் வெளியான ‘சீதாராம கல்யாணம் லங்கலோ’ படத்தை தமிழில் ‘ரவுடி கோட்டை’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் உரிமையை, ’சிவம் அசோஸியேட்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ். சுந்தரலட்சுமி பெற்றிருந்தார்.

இந்த படத்தை தமிழில் வெளியிட அனுமதி வழங்கக்கூடாது என்று நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இது குறித்து, தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " கிட்டத்தட்ட 15 வருடங்களாக பல படங்களை தயாரித்தும், உரிமம் பெற்றும் வெளியிட்டும் வருகிறோம். நிதின், ஹன்சிகா நடித்துள்ள இந்த படத்தை தெலுங்கு திரைத்துறையைச் சேர்ந்த வெங்காம் எண்டர்பிரைசஸ், விஜய்மல்லா பிரசாத் ஆகியோரிடமிருந்து வாங்கினோம். படத்தின் தொழில் நுட்ப வேலைகள் முடிந்து வெளியிட தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று நடிகை ஹன்சிகா கூறிவருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது, ‘படத்தை தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் வெளி யிடக்கூடாது என்பது போன்ற எந்த ஒப்பந்தமும் ஹன்சிகாவிடம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை!’ என்று கூறினர்.

ஹன்சிகாதான் முதலில் பிரச்சினையை தொடங்கியிருக்கி றார். படத்தை வெளியிடத் தடை கேட்பது என்றால் தெலுங்கு பட தயாரிப்பாளர்களிடம்தான் அவர் கேட்க வேண்டும்.

மேலும், நடிகர் சங்கத்தில் அவர் அளித்துள்ள புகாரை திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்!" என்று சுந்தரலட்சுமி கூறியுள்ளார்.

இந்தப்படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள ஹன்சிகா, தமிழில் இந்தப்படம் வெளியானால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதுவதால்தான், இந்தப்புகாரை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

நடிகை ஹன்சிகாவை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டபோது, "இவ்விஷயம் குறித்து இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை!" என்று கூறிவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE