வெட்கித் தலைகுனிகிறேன்: பாவனா விவகாரம் தொடர்பாக ப்ருத்விராஜ் காட்டம்

சமூகத்தின் ஒருவனாக நான் வெட்கித் தலைகுனிகிறேன் என்று பாவனா விவகாரம் தொடர்பாக ப்ருத்விராஜ் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னணி நடிகரான ப்ருத்விராஜ் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "காலையில் எழுந்ததும் அந்த அதிர்ச்சிகரமன செய்தியை தெரிந்துகொண்டேன். தற்போது செய்தியாக, தவறான முறையிலும், பரபரப்புடனும் பரப்பப்பட்டு வரும் அந்த செய்திதான். அது என்னை பாதித்துவிடாலும் எனக்குத் தெரிந்த மிக அழகான பெண்களில் ஒருவருக்கு நேர்ந்துள்ளதைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால், நானோ, துறையைச் சேர்ந்தவர்கள் யாரோ என்ன சொன்னாலும் அது மீனுக்கு தூண்டில் போல, டிஆர்பிக்கு அலைபவர்களுக்கு தீனி ஆகிவிடும்.

தற்போது, கடவுளின் நாடு என சொல்லப்பட்டும் நமது தாய் வழி சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் சொல்லப்பட்டுவிட்டது. ஆம், ஒரு ஆணாக, இந்த அவமானத்தை தாங்கிக்கொண்டிருக்கும் சமூகத்தின் ஒருவனாக நான் வெட்கித் தலைகுனிகிறேன். ஆனால் தயவு செய்து, தற்போது நாம் அனைவரும் செய்யக் கூடியது, அந்தப் பெண்ணின் தைரியத்தை மதிக்க வேண்டியதே.

நாங்கள் ஒரு வாரத்தில் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காலம் கேமராவுக்கு முன் வர விரும்பவில்லை என்று சொன்னார். எனவே படத்திலிருந்து விலகுகிறார். எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியும். அவர் எவ்வளவு தைரியமானவர் என்று தெரியும். அவர் பெரிதும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்தே விலகியிருக்கிறார் என்றால் அது அவரை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும் என்பது புரிகிறது.

தயவுசெய்து தீவிர விசாரணையை நடத்த வேண்டும். தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்னால் சீக்கிரம் நிறுத்த வேண்டும். ஆனால், மற்றவர்களுக்கு நேர்ந்த இந்த துயரத்தை தயவுசெய்து யாரையும், எவரையும் கொண்டாட விடாதீர்கள்.

உங்களோடு இருக்கிறேன் தோழி. நீங்கள் விரைவில் இதிலிருந்து மீண்டவுடன் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் நீங்களாக இருங்கள். இந்த சம்பவம் உங்கள் மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்க விடாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார் ப்ருத்விராஜ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE