தமிழகத்தில் பாகுபலி 2-வை வெளியிடுபவர் யார்?

தமிழகத்தில் ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் எஸ்.என்.ராஜராஜன்

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

ஏப்ரல் 28, 2017 'பாகுபலி 2' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. 'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றி இருப்பது யார் என்பதை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது.

தற்போது தமிழ்நாடு மட்டுமன்றி வெளிநாட்டில் வெளியிடும் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது கே.புரோடக்‌ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் தமிழகத்தில் வெளியிடுவது மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் வெளிநாட்டு உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது.

'பாகுபலி 2' வெளியீடு மட்டுமன்றி ராணா, சத்யராஜ், ரெஜினா, நாசர், கருணாஸ் நடிக்க சத்யசிவா இயக்கும் 'மடைதிறந்து' என்ற பெயரில் தமிழிலும், '1945' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE